
* தாய் - மகன் பாசம்
நடிகர் சிக்கண்ணா, 'உபாத்யாக்ஷா' திரைப்படத்தில், நாயகனாக அறிமுகமானார். இது வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த படங்களில் நாயகனாக வாய்ப்பு பெறுகிறார். தற்போது, 'லட்சுமி புத்ரா' என்ற படத்தில் நடிக்கிறார். படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதை பற்றி அவர் கூறுகையில், “இது தாய் மற்றும் மகன் இடையிலான பாசப்பிணைப்பை கூறும் கதை கொண்டது. என் தாய் கதாபாத்திரத்தில் நடிகை தாரா நடித்துள்ளார். இது வரை உதவி இயக்குனராக இருந்த விஜய் சாமி, இந்த படத்தை இயக்குகிறார். அர்ஜுன் ஜன்யா இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. விரைவில் திரைக்கு வரும்,” என்றார்.
* திருப்புமுனை படம்
நடிகர் தர்ஷன் நடித்த, 'தி டெவில்' திரைப்படம், நடப்பாண்டு இறுதியில் திரைக்கு வரவுள்ளது. அவர் சிறையில் இருப்பதால், பட பிரசார பொறுப்பை, அவரது மனைவி விஜயலட்சுமி ஏற்றுள்ளார். இதில் நாயகியாக நடித்துள்ள நடிகை ரச்சனா ராய் கூறுகையில், “இந்த படம் தர்ஷனின் தொழில் வாழ்க்கையில், சிறப்பான படமாக இருக்கும். பொழுதுபோக்கு கதை கொண்டதாகும். படப்பிடிப்பில் பங்கேற்றபோது, தர்ஷன் முதுகு வலியால் அவதிப்பட்டார். அவரிடம் பல பாடங்களை, நான் கற்றுக்கொண்டேன். இந்த படம் டிசம்பர் 12ம் தேதி, திரைக்கு வரவுள்ளது,” என்றார்.
* மும்மொழி படம்
நாயகன், நாயகியாக கவீஷ் ஷெட்டி மற்றும் மேகா ஷெட்டி நடிக்கும், 'ஆப்பரேஷன் லண்டன் கபே' திரைப்படம், நவம்பர் 28ல் திரைக்கு வரவுள்ளது. இதுகுறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'இந்த படம் கன்னடத்துடன், மராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும், திரைக்கு வரவுள்ளது. இது வரை ரொமான்டிக் ஹீரோவாக நடித்த கவீஷ் ஷெட்டி, இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். மேகா ஷெட்டி கிராமத்து உயர் பள்ளி மாணவியாக நடிக்கிறார். மராத்தி நடிகர்கள் ஷிவானி சுர்வே விராட் மட்கே நடித்துள்ளனர். விரைவில் பாடல்கள், டிரெய்லர் வெளியிடப்படும்' என்றனர்.
* திரில்லர் கதை
ஐ.டி., ஊழியரான சுரேஷ், ஜெர்மனியில் வசிக்கிறார். தற்போது இவர் கன்னடத்தில் 'ரக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் இவரது மகன் நாயகனாகவும், ஆஷிகா, பல்லவி நாயகியராக நடிக்கின்றனர். படம் குறித்து சுரேஷ் கூறுகையில், “என் தந்தை ராஜசேகர், நடிகர் ராஜ்குமார் நடித்த, 'ஹொசபெளகு' என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் 'டானி' என்ற நிழலுலக தாதா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆக்ஷன், திரில்லர் கதை கொண்டதாகும். பெங்களூரில் பிரம்மாண்ட செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தப்படும். சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்வினி புனித்ராஜ்குமார் கிளாப் அடித்து, படப்பிடிப்பை துவக்கிவைத்தார்,” என்றார்.
* நீண்ட இடைவெளி
கன்னட நடிகை ஜோதி ராய், சில ஆண்டுகளாக தெலுங்கு சின்னத்திரையில் பிசியாக இருக்கிறார். 2வது திருமணம் செய்து, ஹைதராபாத்தில் வசிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின், அவர் கன்னடத்துக்கு வந்துள்ளார். இதுகுறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'ஸ்ரீகாந்த் தயாரிக்கும் 'ஹல்கா டான்' என்ற படத்தில், பிரமோத் நாயகனாக, அவருக்கு ஜோடியாக அம்ருதா அய்யங்கார் நடிக்கின்றனர். ஜோதி ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடம், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இதில் நடிகர் சாய்குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளோம்' என்றனர்.
* மெஜஸ்டிக் அட்டகாசம்
அனந்தப்பா தயாரிக்கும், 'மெஜஸ்டிக் - 2' திரைப்படம் வரும் நவம்பரில் திரைக்கு வருகிறது. இதில் தயாரிப்பாளர் ஷில்பா சீனிவாசின் மகன் பரத்குமார், நாயகனாக நடித்துள்ளார். இதுகுறித்து, தயாரிப்பாளர் அனந்தப்பா கூறுகையில், “படத்தில் பரத் குமாருக்கு ஜோடியாக, சம்ஹிதா வின்யா நடித்துள்ளார். நாயகனின் தாய் கதாபாத்திரத்தில், நடிகை ஸ்ருதி நடித்துள்ளார். மெஜஸ்டிக்கில் நடக்கும் சட்டவிரோத செயல்கள், ரவுடிகளின் அட்டகாசம் குறித்து படத்தில் காட்டியுள்ளோம். மெஜஸ்டிக்கில் பிறந்து, வளர்ந்த இளைஞனின் கதைதான் இது. ஹீரோவை அறிமுகம் செய்யும் பாடலில், நடிகை மாலாஸ்ரீ நடனமாடியுள்ளார்,” என்றார்.

