
ரிலீஸ் தேதி எப்போது?
கன்னட நடிகர் தீக்ஷித் ஷெட்டி, பன்மொழிகளில் நடிக்கிறார். இவரது நடிப்பில் பேங்க் ஆப் பாக்கிய லட்சுமி திரைப்படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இது சிவன் தொடர்பான பாடலாகும். கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்பாடல் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் பாடகி ஷில்பாவும், தெலுங்கில் பிரபல பாடகி மங்க்லியும் பாடியுள்ளனர். ஜூடா சாண்டி இசை அமைத்துள்ளார். பாடலை லஹரி வேலு, பாடலை வெளியிட்டு திரைப்பட குழுவினரை வாழ்த்தினார். தீக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக, பிருந்தா ஆச்சார்யா நடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
புதிய பெண் இயக்குநர்
கன்னடம் மட்டுமல்ல, மற்ற திரையுலகிலும் பெண் இயக்குநர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. நடிகைகள் பலரும் நடிப்புடன் நிறுத்தி கொள்கின்றனர். சிலர் இயக்கம், தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் வரிசையில் நடிகை ரஞ்சனி ராகவன் சேர்ந்துள்ளார். கன்னட சின்னத்திரை தொடர்களில் பிரபலமான இவர், வெள்ளித்திரைக்கு வந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்றார். தற்போது படம் இயக்க தயாராகிறார். இன்றைய கால கட்டத்துக்கு பொருந்த கூடிய, குடும்ப கதையை படமாக்குகிறார். சில மாதங்களுக்கு முன், இசை அமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து, கதையை கூறியுள்ளார். கதை பிடித்ததால் இசை அமைக்க சம்மதித்தாராம்.
அதிக மவுசு
தென்னக திரையுலகில், கன்னட நடிகையருக்கு அதிக மவுசு உள்ளது. ராஷ்மிகா மந்தண்ணா, ஸ்ரீலீலா, நபா நடேஷ் உட்பட, பல நடிகைகள் தமிழ், தெலுங்கில் வாய்ப்புகளை அள்ளுகின்றனர். அதே போன்று ஆஷிகா ரங்கநாத்தும் ஒருவர். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வம்பரா, தமிழில் கார்த்தியுடன் சர்தார் - 2 உட்பட, ஏராளமான படங்களை கையில் வைத்துள்ளார். கன்னடத்தையும் விட்டு வைக்கவில்லை. இயக்குனர் சிம்பிள் சுனி இயக்கும், கத வைபவா என, சில படங்களில் நாயகியாக நடிக்கிறார். இவைகள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
ஒரு பாடலுக்கு நடனம்
சந்தன் ஷெட்டி மற்றும் அபூர்வா இணைந்து நடித்துள்ள, சூத்திரதாரி மே 9ம் தேதி திரைக்கு வருகிறது. படத்துக்கு சென்சார் போர்டு யு/ஐ சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் நவரசன் தயாரித்துள்ளார். இது இவரது தயாரிப்பில் உருவான ஐந்தாவது படமாகும். இரண்டு பாடல்களை படக்குழுவினர், ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்கு சந்தன் ஷெட்டியே இசை அமைத்துள்ளார். இவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் கிரைம், திரில்லர் கதை கொண்டது. நடிகை சஞ்சனா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
நாயகி வேட்டை
நடிகர்கள் ரமேஷ் அரவிந்த், கணேஷ், இணைந்து நடிக்கும் யுவர்ஸ் சின்சியர்லி ராம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1990ல் நடந்த சம்பவத்தை சுற்றிலும் திரைக்கதை நகர்கிறது. பல திருப்பங்கள் உள்ளன. படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர். இதில் ஒரு கதாபாத்திரத்துக்கு பன்மொழி நடிகை மீரா ஜாஸ்மினை அழைத்து வர, முயற்சி நடப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே பாவனா நடிப்பார் என, தெரிகிறது. இவர் ஏற்கனவே கன்னடத்தில் ஜாக்கி, ரோமியோ உட்பட, பல படங்களில் நடித்தவர். மற்றொரு நாயகி இன்னும் முடிவாகவில்லை.
பல்லாரிக்கு பெருமை
பிரவீன் குமார் எழுதி இயக்கிய, அமர பிரேமி அருண் திரைக்கு வர தயாராகிறது. இது பல்லாரியில் நடக்கும் கதையாகும். முழுமையான படப்பிடிப்பு இங்கு நடத்தப்பட்டது. பல்லாரியில் முழு படப்பிடிப்பும் நடந்த முதல் கன்னட படம் என்ற பெருமை, இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. பல்லாரி பகுதியில் பேசப்படும் கன்னடம் பயன்படுத்தப்பட்டது. அருண் கதாபாத்திரத்தில் ஹரிஷர்வா, காவ்யா கதாபாத்திரத்தில் தீபிகா ஆராத்யா நடித்துள்ளனர். உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.