
* நிறைவேறிய ஆசை
கன்னட திரையுலகம் மூலமாக, நடிப்பு தொழிலை துவக்கிய பல நடிகைகள், வேறு மொழிகளுக்கு சென்று வேரூன்றுகின்றனர். அதன்பின் கன்னடத்தை கை கழுவுகின்றனர்; சிலர் மட்டும் கன்னடத்துக்கு திரும்புகின்றனர். நடிகை அஸ்வினி சந்திரசேகர், கன்னடத்தில் அறிமுகமாகி, தமிழ் மொழிக்கு சென்றார். பத்து ஆண்டுக்கு பின், இப்போது ரிப்பன்பேட்' திரைப்படம் மூலமாக, கன்னடத்தில் நடிக்கிறார். கிஷோர் இயக்கும் இந்த படத்தில் விஜய் ராகவேந்திராவுக்கு ஜோடியாக, அவர் நடிக்கிறார். மென்மையான குணம் கொண்ட நாயகி, டாக்டராக இருந்தும், கொடுமைக்கார கணவரிடம் சிக்கி அவதிப்படுகிறார். அவரிடம் இருந்து விடுபட போராடுவதே கதையின் சாராம்சமாகும். அஸ்வினிக்கு நிஜ வாழ்க்கையில் டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த படம் மூலமாக அந்த ஆசை நிறைவேறியதாம்.
* சினிமா பின்னணி
நடிகை ஸ்ருதியின் மகள் கவுரிக்கு அழகு, திறமை என, ஹீரோயினுக்கு இருக்க வேண்டிய, அனைத்து அம்சங்களும் உள்ளன. ஆனால் இன்னும் திரையுலகுக்கு வரவில்லை. இவர் தாய் ஸ்ருதி பிரபல நடிகை. தந்தை மகேந்தர் பிரபல இயக்குனர். இவரது தாய் மாமா சரணும் நடிகர். இவரது தாத்தா, பாட்டியும் கூட திரையுலகில் இருந்தவர்கள். சினிமா குடும்ப பின்னணி கொண்ட கவுரி, இன்னும் நடிப்பு தொழிலுக்கு வரவில்லை. சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருப்பவர். தன் போட்டோக்களை வெளியிடுகிறார். இப்போதும் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். போட்டோக்களை பார்த்த பலரும், இவர் விரைவில் நடிகையாவார் என, பலரும் எதிர்பார்க்கின்றனர்.
* காதலா... வாழ்க்கையா!
கன்னடத்தில், டகரு, சைக்கோ உட்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை அனிதா பட். இவர் சொந்தமாக பட தயாரிப்பு கம்பெனி துவக்கி, படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது விராட் பில்வா இயக்கி நடிக்கும், 'லவ் மேட்ரு' படத்தில், அச்யுத் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இக்கதை இரண்டு கால கட்டங்களில் நடக்கிறது. காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் அனிதா பட் நடித்துள்ளார். காதலை விட வாழ்க்கை முக்கியம் என்பதை படத்தில் காண்பித்து உள்ளனர். மூன்று ஆண்டாக படப்பிடிப்பு நடந்தது. நேற்று முன் தினம், திரைக்கு வந்து நன்றாக ஓடுவதால் அனிதா பட் உட்பட படக்குழுவினர் குஷி அடைந்துள்ளனர்.
* சரும நோய்
மகேஷ் தயாரித்து, இயக்குவதுடன் நாயகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிளிசுக்கி ஹள்ளிசஹக்கி படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ஏற்கனவே போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 24ம் தேதி திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெள்ளை சரும நோயால் அவதிப்படுவோரை மையமாக வைத்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. காஜல்குந்தர் நாயகியாக நடித்துள்ளார். சுவாரசியமாக கதையை கொண்டு சென்றுள்ளனர்.
* மீண்டும் சுனில் ெஷட்டி
ரூபேஷ் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய, ஜெய் திரைப்பட டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நடிகர் ஸ்ரீமுரளி டீசர் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். நவம்பரில் திரைக்கு வரவுள்ளது. ரூபேஷ் ஷெட்டி துளு மொழியில் இருந்து கன்னடத்துக்கு வந்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஷ்விதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு கன்னடம் புதிதல்ல. ஏற்கனவே பயில்வான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நவம்பர் 14ல் திரைக்கு வருகிறது.
* மக்கள் சேவை
நடிகர் வினோத் ராஜ் நடிப்பில் மட்டுமின்றி, நடனத்திலும் கை தேர்ந்தவர். இவரது நடனத்துக்கு இப்போதும் ரசிகர்கள் உள்ளனர். நடிப்புக்கு முழுக்கு போட்ட இவர், தன் தாய் லீலாவதியுடன் சேர்ந்து சமூக பணிகளில் ஈடுபட்டார். தாய் காலமான பின்னரும், மக்கள் சேவையை தொடர்கிறார். இவர் சில நாட்களுக்கு முன், சாலையில் காரை நிறுத்தி விட்டு வரும் போது, நடிகர் தர்ஷனின் தி டெவில் திரைப்படத்தில் வரும் 'இத்தரே நிம்மதியாக இரபேகு' என்ற வரிகளில் துவங்கும் பாடலுக்கு அற்புதமாக நடனமாடினார். இதை சிலர் வீடியோவில் பதிவு செய்து, சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளனர்.

