
முக்கிய வேலை ஓய்வு!
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, காந்தாரா சேப்டர் 1 திரைப்படம், இன்று திரைக்கு வருகிறது. அவரது அடுத்த படம் குறித்து கேட்ட போது, ''இந்த படத்துக்காக, நாங்கள் அதிகம் உழைத்துள்ளோம். ரிலீஸ் தேதி நெருங்கியதால், நெருக்கடியில் இருந்தோம். படமும் நல்ல முறையில் திரைக்கு வந்துள்ளது. இனி ஓய்வெடுப்பதே, என் முக்கிய வேலையாகும். படத்தை உலக அளவில் திரையிட, ஹொம்பாளே நிறுவனம் அதிகமாக பணியாற்றியது. அடுத்த படத்தை பற்றி, நான் ஆலோசிக்கவில்லை. இப்போது எனக்கு தேவை ரெஸ்ட்,'' என்றார்.
ஆக் ஷன், திரில்லர் கதை!
தேவராஜ் குமார் இயக்கி, தயாரித்து, நடிக்கும் , ஆயுதா திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு, 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ''நடப்பாண்டு இறுதியில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம். ஆக்ஷன், திரில்லர் கலந்த குடும்ப சித்திரம். ஹொன்னாவரா, பைந்துார், பெங்களூரு, சென்னப்பட்டணா உட்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். நாயகியராக அம்ருதா மற்றும் சம்ஹிதா வின்யா நடிக்கின்றனர். மூத்த கலைஞர்களும் நடித்துள்ளனர்,'' என்றார்.
நட்பை பிரித்த நடிகை!
ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த நடிகர் தர்ஷனும், இயக்குனர் ஓம் பிரகாஷும் இப்போது எதிரிகளாக முறைத்து கொள்கின்றனர். இதற்கு காரணம் ஒரு நடிகையாம். இது குறித்து, ஓம் பிரகாஷ் கூறுகையில், ''எனக்கும், தர்ஷனுக்கும் விரிசல் ஏற்பட, நடிகை நிகிதாவே காரணம். தர்ஷனின் குடும்பத்தில் தலையிட்டு டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என, நிகிதாவுக்கு புத்திமதி கூறினேன். ஆனால், அவர் தர்ஷனிடம் என்னை பற்றி ஏதேதோ கூறியதால், எங்களுக்குள் பிரிவினை ஏற்பட்டது. தர்ஷனை வைத்து, நான் படம் இயக்காமல் போனதற்கு, நிகிதா செய்த குளறுபடிகளே காரணம்,'' என்றார்.
உண்மை சம்பவம்!
நடிகர் கோமல் நடிக்கும், கோணா திரைப்படம் படப்படிப்பு முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது. கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில், கோமலை பார்க்கலாம். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. தனிஷா குப்புன்டா, கார்த்திக் கிரண், ரவி கிரண் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பதில், தனிஷா குப்புன்டாவும் கை கோர்த்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளோம். இதை கண்டு படத்தை பார்க்க, ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்' என்றனர்.
மீண்டும் நடிக்கும் ரம்யா!
கன்னடர்களின் கனவு கன்னியான நடிகை ரம்யா, நீண்ட காலமாகவே, நடிப்பில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். அவரது இடம் இப்போதும், காலியாகவே உள்ளது. அவரை திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது, அவர் படத்தயாரிப்பில் ஆர்வம் காட்டுகிறார்.
நடிப்புக்கு திரும்புவது குறித்து, ரம்யா கூறுகையில், ''நல்ல கதைக்காக காத்திருந்தேன். இப்போது நான் எதிர்பார்த்த கதை கிடைத்துள்ளது. விரைவில் பட வேலைகளை துவக்குவேன். படத்தின் டைட்டில், கதை, கதாபாத்திரம் உட்பட மற்ற விஷயங்கள் குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வமாக விவரிப்பேன், என்றார்.
போராட்டத்துக்கு பலன்!
கே.ஜி.எப்., திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய சந்திர மவுலி, தற்போது இயக்குநராக மாறி, தில்மார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ராம் நாயகனாக அறிமுகமாகிறார்.
இது பற்றி, அவர் கூறுகையில், ''திரைப்படத்தில் ஹீரோவாக வேண்டும் என, 19 ஆண்டுகளாக போராடினேன். இப்போதுதான் தில்மார் படத்தின் மூலமாக, எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு காரணம் இயக்குநர் சந்திர மவுலிதான். ஒவ்வொரு விஷயத்திலும், என் தவறுகளை திருத்தினார். தயாரிப்பாளர் புதியவர் என்றாலும், ஒரு நாள் கூட ஷூட்டிங் செட்டுக்கு வரவில்லை. படக்குழுவினர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்,'' என்றார்.