ADDED : செப் 17, 2025 07:33 AM

பெங்களூரு : தர்மஸ்தலா வழக்கில் ஷிவமொக்கா சிறையில் உள்ள, சின்னையாவின் ஜாமின் மனுவை, பெல்தங்கடி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, சின்னையா என்பவர் பொய் புகார் அளித்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டார். எஸ்.ஐ.டி., விசாரணைக்கு பின், ஷிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் கேட்டு பெல்தங்கடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது இரண்டு முறை விசாரணை நடந்தது. சின்னையாவுக்கு ஆதரவாக மாவட்ட சட்ட சேவை ஆணைய வக்கீல்கள் வாதாடினர்.
நேற்று நடந்த விசாரணையின்போது, அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், ''தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக சின்னையாவிடம் இன்னும் விசாரிக்க வேண்டி உள்ளது. அவருக்கு ஜாமின் கொடுத்தால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விஜயேந்திரா, சின்னையாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையில், தர்மஸ்தலா வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விட்டல் கவுடா எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக, பங்களாகுட்டா வனப்பகுதியில் தோண்டுவதற்கு வனத்துறையிடம் எஸ்.ஐ.டி., அனுமதி கோரியுள்ளது.