ADDED : மே 19, 2026 11:32 PM
பெங்களூரு: காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக, தீபிகா ரெட்டி உட்பட நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு, காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கவும், இவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் துணை தலைவராக பணியாற்றியவர் தீபிகா ரெட்டி.
இவர் உட்பட இளைஞர் காங்கிரசின் 15 பேரை பொறுப்பில் இருந்து நீக்கி, தேசிய இளைஞர் காங்கிரஸ் உத்தரவு பிறப்பித்தது.
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத் கவுடா செய்த சதியால் தான், தங்களை பொறுப்பில் இருந்து நீக்கியதாக தீபிகா ரெட்டி உட்பட சிலர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது, மஞ்சுநாத் கவுடா, தீபிகா ரெட்டி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இந்த தகவல், கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் சென்றது.
கட்சி அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தீபிகா ரெட்டி, துணை தலைவர்கள் சந்தீப், மஞ்சுநாத் ஷெட்டி, பொது செயலர் நிகில் கொண்டாஜி ஆகியோருக்கு, தேசிய இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் நிகம் பண்டாரி நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.
நோட்டீசில், '24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். திருப்திகரமான பதில் அளிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மோதல் விவகாரம், கர்நாடக காங்கிரஸ் தலைவரான சிவகுமார் கவனத்திற்கும் சென்றது. கட்சியின் செயல் தலைவர் சந்திரசேகர் தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, என்ன நடந்தது என விசாரித்து, அறிக்கை அளிக்குமாறு அவர் உத்தரவிட்டு உள்ளார்.
