பாகல்கோட் தொகுதியில் போட்டியிட ஒரே குடும்பத்தினரிடையே மோதல்
பாகல்கோட் தொகுதியில் போட்டியிட ஒரே குடும்பத்தினரிடையே மோதல்
ADDED : மார் 18, 2026 05:31 AM
பாகல்கோட்: மேட்டி மறைவினால் காலியான, பாகல்கோட் தொகுதி இடைத்தேர்தலுக்கு, அவரது குடும்பத்தினரே சீட் கேட்டு முட்டி மோதுவது, முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
பாகல்கோட் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த மேட்டி, கடந்தாண்டு காலமானார். இந்த தொகுதிக்கு ஏப்ரல், 9ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பாகல்கோட் தேர்தலில், பா.ஜ.,வின் வீரண்ணா சரந்திமடா, காங்கிரசின் மேட்டி இடையே நேரடி போட்டி நடப்பது வழக்கம். இருவரும் மாறி, மாறி வெற்றி, தோல்வியை சந்தித்தனர்.
கடந்த, 2018ல் மேட்டியை தோற்கடித்து, வீரண்ண சரந்திமடா வெற்றி பெற்றார். 2023ல் அவரை தோற்கடித்து, மேட்டி தொகுதியை கைப்பற்றினார். இவர் காலமானதால், பாகல்கோட் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பா.ஜ., வேட்பாளராக, வீரண்ண சரந்திமடா போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. ஆனால், காங்கிரசால் வேட்பாளரை முடிவு செய்ய முடியவில்லை. இத்தொகுதியில் போட்டியிட, மேட்டியின் மகன்கள் மல்லிகார்ஜுன் மேட்டி, உமேஷ் மேட்டி சீட் எதிர்பார்க்கின்றனர். மேட்டியின் மகள் மஹாதேவியும், தனக்கு சீட் கொடுக்கும்படி பிடிவாதம் பிடிக்கிறார். வரும் வெள்ளிக்கிழமையன்று, வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தினர், சீட் கேட்பதால் காங்கிரஸ் மற்றும் முதல்வர் சித்தராமையாவுக்கு, பெரும் தலைவலியாக உள்ளது. மேட்டி முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர். தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது.
