/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி சர்வே விரைவுபடுத்த கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
/
ஜாதிவாரி சர்வே விரைவுபடுத்த கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
ஜாதிவாரி சர்வே விரைவுபடுத்த கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
ஜாதிவாரி சர்வே விரைவுபடுத்த கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
ADDED : செப் 27, 2025 05:04 AM

பெங்களூரு: ஜாதிவாரி சர்வே பணிகளை விரைவுபடுத்த, மாவட்ட கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 22ம் தேதி முதல் ஜாதிவாரி சர்வே பணி துவங்கியது. சர்வேயில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஒரு நாளைக்கு 120 முதல் 150 வீடுகளில் சர்வே நடத்த வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் சர்வர் பிரச்னையால் இலக்கை முடிக்க முடியாமல், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
ஜாதிவாரி சர்வே தொடர்பாக கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களுடன், பெங்களூரு விதான் சவுதாவில் காணொளி காட்சி மூலம் முதல்வர் சித்தராமையா, நேற்று ஆலோசனை நடத்தினார்.
துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் ஹெச்.கே.பாட்டீல், கிருஷ்ணபைரேகவுடா, ரஹிம்கான், பைரதி சுரேஷ், தலைமை செயலர் ஷாலினி, பல துறைகளின் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நீட்டிப்பு ஆலோசனை முடிந்த பின், சித்தராமையா அளித்த பேட்டி:
ஜாதிவாரி சர்வே பணிகள் துவங்கி நேற்று ஐந்தாவது நாள். முதல் நான்கு நாட்களில் சர்வே பணியின்போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது.
தற்போது அது தீர்த்துவைக்கப்பட்டது. சர்வே நடத்தப்படும்போது என்ன பிரச்னை ஏற்பட்டாலும் அதை உடனடியாக சரிசெய்ய, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர், கமிஷனருக்கு அறிவுறுத்தி உள்ளேன். இனி சர்வே பணிகள் துரிதமாக நடக்கும். எக்காரணம் கொண்டும் சர்வே நீட்டிக்கப்படாது.
ஒவ்வொரு நாளும் 10 சதவீத சர்வே பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால் கடந்த நான்கு நாட்களில், தினமும் 4 சதவீத சர்வே பணிகள் தான் நடந்துள்ளன.
சர்வேயில் ஈடுபடும் துவக்க, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இடையே தவறான புரிதல் இருந்தது. அதை சரிசெய்துள்ளோம். சர்வே பணியில் ஈடுபடுவோருக்கு கவுரவ தொகை வழங்கப்படும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சர்வே பணிகளை விரைவுபடுத்த கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
மலைப்பகுதி மாநிலத்தில் மொத்தம் 1,43,81,702 வீடுகளில் சர்வே நடத்த வேண்டும். இதுவரை 2,76,016 வீடுகளில் சர்வே நடந்துள்ளது. சர்வே பணியில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கள் மாவட்டத்தில் நடக்கும் சர்வேயின் நிலை என்ன என்பது பற்றி, கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்கள் தினமும் மதிப்பாய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளேன்.
பெங்களூரு நகர மாவட்டத்திலும் சர்வே பணிகள் துவங்கி உள்ளன. மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 லட்சம் வீடுகள் உள்ளன.
தாமதமாக சர்வே துவங்கி இருப்பதால், பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சர்வேயில் இருந்து எந்த குடும்பமும் விடுபடாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளேன்.
ஆன்லைன் சர்வேயில் பங்கேற்கவும் மக்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வசதிக்காக, அப்பகுதியில் உள்ள பள்ளிகளில், சர்வே மையம் துவங்க அனுமதி கொடுத்துள்ளோம் .
சர்வே பணியின்போது ஏதாவது வீடு பூட்டப்பட்டு இருந்தால், அந்த வீட்டில் இன்னொரு நாள் சர்வே நடத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.