யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில் முதல்வர் சிவகுமார் திடீர் ஆய்வு
யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில் முதல்வர் சிவகுமார் திடீர் ஆய்வு
ADDED : செப் 09, 2026 03:48 AM
பெங்களூரு: யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில், முதல்வர் சிவகுமார் நேற்று திடீரென ஆய்வு செய்தார். வியாபாரிகள், பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பெங்களூரு யஷ்வந்த்பூரில் உள்ள ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டிற்கு, முதல்வர் சிவகுமார் நேற்று காலை திடீரென சென்றார். பூண்டு, வெங்காயம், உருளை கிழங்கு, தேங்காய் வியாபாரிகள், மண்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, விஜயபுராவின் தேவரஹிப்பரகியை சேர்ந்த விவசாயி ஒருவர், 'நாங்கள் பயிர் காப்பீட்டிற்காக சுய உதவி சங்கத்திற்கு பணம் செலுத்தினோம். ஆனால் அவர்கள் கூட்டுறவு வங்கியில் பணம் செலுத்தாததால், எங்கள் காப்பீடு நிராகரிக்கப்பட்டது' என்றார்.
அந்த விவசாயி பணம் செலுத்திய ஆவணத்தை சரிபார்த்த முதல்வர், பணியில் அலட்சியமாக இருந்த, சுய உதவி குழு அதிகாரியை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
கர்நாடகாவின் வட மாவட்டங்களில் இருந்து தங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்த வியாபாரிகளிடம், கஷ்டங்களை கேட்டறிந்தார். மார்க்கெட்டில் உள்ள கடைகளில் எடை இயந்திரங்களை சரிபார்த்தார். மார்க்கெட்டில் வேலை செய்யும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், 'கிரஹஜோதி, சக்தி' திட்டத்தின் பலன்களையும் கேட்டறிந்தார்.
பின், மார்க்கெட்டிற்குள் இருந்த சிறிய ஹோட்டலில், தொழிலாளர்களுடன் அமர்ந்து இரண்டு இட்லி, அரை கப் எலுமிச்சை சாதம் சாப்பிட்டார். ஹோட்டல் உரிமையாளரிடம், 500 ரூபாய் கொடுத்து, 'என்னுடன் சேர்ந்து சாப்பிட்டவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுக்கிறேன். அவர்களிடம் வாங்க வேண்டாம்' என்றார்.
மார்க்கெட்டில் ஆய்வு செய்த போது, குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது பற்றி தகவல் அறிந்ததும், முதல்வர் கடும் கோபம் அடைந்தார்.
இதை கவனிக்காமல் என்ன செய்கிறீர்கள் என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார். முதல்வர் உத்தரவின்படி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வேலை செய்த, வடமாநில சிறுவர்கள் 16 பேர் மீட்கப்பட்டனர். நான்கு கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
யார் என தெரியாது!
தன்னிடம் குறை கூறிய பெண்ணிடம், 'அரசின் ஐந்து வாக்குறுதி திட்டத்தால் பயன் பெறுகிறீர்களா' என்று சிவகுமார் கேட்டார். அதற்கு அப்பெண், நிச்சயம் பலன் அடைகிறேன் என்று கூறியதுடன், திட்டங்களை கொண்டு வந்தது சித்தராமையா தான் என உறுதியாக சொல்வேன் என்றார்.
சிரித்து கொண்டே சிவகுமார், 'நான் யார் என தெரியுமா' என்று பெண்ணிடம் கேட்க, 'தெரியாதே' என்று கூறினார். அருகில் இருந்தவர்கள் இவர் தான் முதல்வர் என்று கூற முயன்றனர். வேண்டாம் என்று தடுத்த சிவகுமார், பெண்ணின் குழந்தைத்தனமான பேச்சை கண்டு ரசித்தார்.
திடீர் உடல்நலக்குறைவு
முதல்வர் சிவகுமார் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும், நேற்று காலையில் இருந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் அதிகரித்தது. விதான் சவுதாவுக்கு வந்த டாக்டர், அவருக்கு சிகிச்சை அளித்தார். பின், அவரது உடல்நிலை சீரானது.
