/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.360 கோடி உணவு வீண் முதல்வர் சித்தராமையா கவலை
/
பெங்களூரில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.360 கோடி உணவு வீண் முதல்வர் சித்தராமையா கவலை
பெங்களூரில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.360 கோடி உணவு வீண் முதல்வர் சித்தராமையா கவலை
பெங்களூரில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.360 கோடி உணவு வீண் முதல்வர் சித்தராமையா கவலை
ADDED : அக் 16, 2025 11:14 PM

பெங்களூரு: பெங்களூரில் ஒவ்வொரு ஆண்டும் 360 கோடி ரூபாய் உணவு வீணாவதாக, முதல்வர் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள விருந்து மண்டபத்தில், உணவு துறை சார்பில் உலக உணவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில் இருந்த அரிசி, உணவு தானியங்களை ஆய்வு செய்தார்.
பின், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கர்நாடகாவை பசியில்லா மாநிலமாக மாற்றுவது, காங்கிரஸ் அரசின் குறிக்கோள். யாரும் பசியுடன் துாங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். 'அன்னபாக்யா' அரிசியை சேகரித்து கள்ளச்சந்தையில் விற்போர் மீது, அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிசி கள்ளச்சந்தையில் விற்பனை ஆவதை தடுக்க, 10 கிலோ அரிசிக்கு பதிலாக ஐந்து கிலோ அரிசி, ஐந்து கிலோ பருப்பு வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
கவிஞர் பிந்த்ரே, விவசாயிகளை 'அன்னபிரம்மா' என்று வர்ணித்து உள்ளார். அரிசியை வீணாக்குவதும்; உணவை துாக்கி வீசுவதும் விவசாயிகளை அவமதிப்பது போன்றதாகும். ஒரு காலத்தில் உணவுப் பொருட்களுக்காக நாம் அமெரிக்காவை சார்ந்து இருந்தோம்.
இப்போது வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ளோம்.
உணவு அதிகளவில் வீணாவது வருத்தம் அளிக்கிறது.
பெங்களூரில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 943 டன் உணவு வீணாக்கப்படுகிறது.
இதன்மதிப்பு 360 கோடி ரூபாய். உணவை வேண்டுமென்றே வீணாக்குவது, உணவின் மீது காட்டும் ஆணவ செயல்.
உணவை வீண் செய்வது பாவம் என்று, மகாத்மா காந்தி கூறியதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார்.
இந்த திட்டத்தை பா.ஜ., கடுமையாக எதிர்த்தது. அவர்களின் சித்தாந்தம் ஏழைகளுக்கு எதிரானது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உணவு முனியப்பா, வீட்டுவசதி ஜமீர் அகமதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.