/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனார்த்தன ரெட்டியை ஆதரிக்கவில்லை முதல்வர் சித்தராமையா பேட்டி
/
ஜனார்த்தன ரெட்டியை ஆதரிக்கவில்லை முதல்வர் சித்தராமையா பேட்டி
ஜனார்த்தன ரெட்டியை ஆதரிக்கவில்லை முதல்வர் சித்தராமையா பேட்டி
ஜனார்த்தன ரெட்டியை ஆதரிக்கவில்லை முதல்வர் சித்தராமையா பேட்டி
ADDED : மே 16, 2025 11:03 PM

கொப்பால்: “என் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக போராடி உள்ளேன். கனிம சுரங்க வழக்கில் சிறைக்கு சென்ற ஜனார்த்தன ரெட்டியை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை,” என, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாங்கள் ஆட்சிக்கு வந்து வரும் 20ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. அரசின் சாதனைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க ஊடக மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று லட்சம் பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம்.
போர் நிறுத்தம்
'ஆப்பரேஷன் சிந்துார்' விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தங்கள் சொந்த அறிக்கைகளை வழங்கி உள்ளனர்.
போர் நிறுத்தம் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் ஒன்று கூறினார். மறுநாள் இன்னொன்று கூறுகிறார். அவர் முதலில் கூறியது சரியாக இருக்கலாம்.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த பாகிஸ்தானுக்கு எதிராக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது சரியல்ல. பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.
தேவைப்பட்டால் மட்டும் போர் செய்யலாம் என்று நான் கூறினேன். ஆனால் ஊடகங்கள் வேறு விதமாக கூறின. போர் வேண்டவே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. நாட்டு மக்களை பாதுகாக்க போர் அவசியம்.
கிரேட்டர் பெங்களூரு திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் விமர்சிக்கிறார். ஆனால் பா.ஜ., பெங்களூரை இரண்டாக பிரிக்க நினைத்தது.
ஒன்றரை கோடி மக்கள்தொகை கொண்ட பெங்களூரை, ஒரே மாநகராட்சியின் கீழ் நிர்வகிப்பது கடினம். நிர்வாகரீதியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநகராட்சிகள் உருவாக்கப்படும்.
மேலிடம் முடிவு
கொப்பால் அலகுர்த்தி தொழிற்பேட்டையில், பால்டோட்டா நிறுவனம் இரும்பு தொழிற்சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டேன்.
அந்த நிறுவனத்திற்கு தொழிற்சாலை துவங்க அனுமதி கொடுத்தது உண்மை தான். தற்போது இங்குள்ள நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.
ஜனார்த்தன ரெட்டியின் தகுதி நீக்கத்தால் கங்காவதி தொகுதி காலியாகி உள்ளது. அந்த தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். வேட்பாளர் யார் என்று கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
கடந்த காலத்தில் சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக போராடி உள்ளேன். பெங்களூரில் இருந்து பல்லாரி வரை பாதயாத்திரை நடத்தி உள்ளேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்று கூறினேன். அது இப்போது நடந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் கங்காவதி தொகுதியில், ஜனார்த்தன ரெட்டியை நான் ஆதரித்தேன் என்பது பொய். அவரை ஒரு போதும் நான் ஆதரிக்கவில்லை.
என் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக போராடி உள்ளேன்.
நான் எதிர்த்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை யாருமே எதிர்த்து இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.