நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர் சித்தராமையா புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என மக்கள் எதிர்பார்ப்பு
நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர் சித்தராமையா புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 05, 2026 05:55 AM

பெங்களூரு: முதல்வரும், நிதி அமைச்சருமான சித்தராமையா நாளை, 17வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், 85 முதல், 90 சதவீதத்தை அவர் நிறைவேற்றியுள்ளதால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறிப்பாக, கவர்ச்சி அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நாளை தாக்கல் செய்கிறார். மாநிலத்தில் அதிக நாட்கள் முதல்வர் பதவி வகித்து, புதிய சாதனை செய்த இவர், பட்ஜெட் தாக்கல் செய்வதிலும் மற்றொரு சாதனை படைக்கிறார்.
நாளை அவர் தாக்கல் செய்வது, 17வது பட்ஜெட்டாகும்.
கடந்தாண்டு மாநில வரி வருவாய், வரி சாராத வருவாய், மத்திய அரசின் வரிப்பங்கு, நிதியுதவி, கடன் என, அனைத்தையும் கருத்தில் கொண்டு, 4.09 லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். 90,000 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்படும் என, மதிப்பிட்டிருந்தார்.
இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க, மதுபான உரிமத்தை ஏலம் விடுவது, வரி ஏய்ப்பை தடுக்க முயற்சித்தது, மதுபான விலையை அதிகரிப்பு என, பல நடவடிக்கைகளை எடுத்து வருவாயை அதிகரித்தார்.
கலால் மற்றும் வர்த்தக வரி வசூலில், அவர் நிர்ணயித்த இலக்கு எட்டப்பட்டது.
அதேநேரத்தில், காங்கிரஸ் அரசு பதவியேற்பதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்த பொருளாதார ஒழுங்கின்மை, வாக்குறுதி திட்டங்களுக்கு, அதிகமான நிதி பயன்படுத்தப்பட்டது போன்றவற்றால், நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ஐந்து முதல் 10 சதவீதம் திட்டங்களை, முதல்வரால் செயல்படுத்த முடியவில்லை.
ஆனால், பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும், 90 சதவீதம் திட்டங்களை நிறைவேற்றி அவர் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதியுதவி கிடைக்காத காரணத்தால், மேகதாது, களசா பண்டூரி உட்பட, சில நீர்ப்பாசன திட்டங்கள் நிலுவையில் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிதித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சில திட்டங்களை செயல்படுத்த அரசு அனுமதி அளித்தது. ஆனால், அதற்கான நிதி வழங்கப்படாததால், திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. நகர மேம்பாடு, அடிப்படை வசதிகள், வீட்டு வசதி, நீர்ப்பாசனம், சமூக நலம், வருவாய், கிராம வளர்ச்சி உட்பட பல்வேறு துறைகளின் முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
கடந்த முறை மிகவும் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால், விவசாயம், கால்நடை துறைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 85 - 90 சதவீதம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
முதல்வ ர் சித்தராமையா, பட்ஜெட்டில் பொது மக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளான கல்வி, சுகாதார துறைகளுக்கு, கூடுதல் முக்கியத்துவம் அளித்திருந்தார்.
அதன்படி, அந்த துறைகளின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. 700 கர்நாடக பப்ளிக் பள் ளிகள் திறப்பது, கவுரவ பேராசிரியர்கள் நியமனம், சமையல் ஊழியர்களின் ஊதிய உயர்வு, மாணவர்களுக்கு திறன் பயிற்சி, உலக வங்கியில் 2,500 கோடி ரூபாய் கடனில், கல்லுாரிகளில், ' எக்சலென்ஸ் சென்டர்கள்' ' அமைப்பது, பட்டப்படிப்பு, பொறியியல், பாலி டெக்னிக் கல்லுாரிகளில், 2,000 பேராசிரியர்கள் நியமனம் உட்பட, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இவ்வாறு கூறினர்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவற்றை, முதல்வர் சித்தராமையா அரசு நிறைவேற்றியுள்ளதால், நாளை அவர் தாக்கல் செய்யும் வரும் நிதியாண்டிற்கான பட் ஜெட்டிலும், புதிய திட்டங்கள் குறிப்பாக, கவர்ச்சி அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது.
