அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் காந்தி பெயர் முதல்வர் சித்தராமையா தகவல்
அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் காந்தி பெயர் முதல்வர் சித்தராமையா தகவல்
ADDED : ஜன 28, 2026 06:52 AM

பெங்களூரு: ''மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும், மஹாத்மா காந்தி பெய ர் சூட்டுவது குறித்து, அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மத்திய அரசின், 'விபி ஜி ராம் ஜி' திட்டத்தை செயல்படுத்துவதை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று மாநில காங்கிரசார் போராட்டம் நடத்தினர். சித்தராமையா பேச வரும் போது, காங்கிரசை சேர்ந்த சிலர், 'டிகே... டிகே...' என்று கோஷமிட்டனர். இதனால், கோபமடைந்த சித்தராமையா, 'ஏ சும்மா உட்காருங்கள்... யார் அது டிகே' என்று கேட்டார்.
பின், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மத்திய அரசின், 'விபி ஜி ராம் ஜி' சட்டம் தீங்கு இழைக்கும். இதில், ராமர் வரவேண்டும் என்பதற்காகவே விபி ஜி ராம் ஜி என்று பெயரிட்டு உள்ளனர். ஆனால், தசரத ராமர் இல்லை, சீதாராமர் இல்லை, கவுசல்ய ராமர் இல்லை. மன்மோகன் சிங் பல பிரச்னைகளையும் தீர்க்க சட்டங்கள் இயற்றினார். மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும், மஹாத்மா காந்தி பெயர் சூட்டுவது குறித்து, அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஏழைகள், பெண்களுக்கான திட்டங்களை காங்கிரசார் மட்டுமே வகுக்க முடியும். பா.ஜ., அதை அழித்து வருகிறது. கிராமங்களில் வேலை கிடைப்பதை, அவர்கள் தடுத்து வருகின்றனர். பா.ஜ.,வை வழிநடத்துவது ஆர்.எஸ்.எஸ்., தான். ஏழைகளுக்கு பணம் கிடைக்காது; ஏழைகள் வேலைக்காரர்களாகவே இருக்க வேண்டும் என்று, அவர்கள் விரும்புகின்றனர்.
ஏழைகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்கள் எங்கிருந்தாலும் வேலை பெறலாம். கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் பறித்து விட்டனர். இப்போது பஞ்சாயத்துகளின் அதிகாரம் டில்லிக்கு சென்று விட்டது. இனி வேலை, டில்லியில் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் தேர்ந்தெடுக்கும் பஞ்சாயத்துகளில் மட்டுமே வேலை கிடைக்கும். டில்லியில் சொல்வது போன்று வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்துக்கு பின், காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும், பி.எம்.டி.சி., சொகுசு பஸ்சில், லோக்பவனுக்கு சென்றனர். அங்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளித்தனர்.
