வறட்சி ஆய்வு செய்ய மத்திய குழு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
வறட்சி ஆய்வு செய்ய மத்திய குழு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
ADDED : ஜூலை 15, 2026 12:37 AM
பெங்களூரு: 'கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதியை ஆய்வு செய்ய, மத்திய குழுவை அனுப்பி வையுங்கள்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ளது. மாநிலத்தில் முக்கிய அணைகளான துங்கபத்ரா, கட்டபிரபா, மல்லபிரபா, நாராயணபுரா அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. காவிரி படுகையில் உள்ள கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மழை இல்லாததால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காரீப் பருவ பயிர்சாகுபடி பணிகள் தாமதமாகியுள்ளன. கிராமம், நகர்ப்புறங்களில் எழும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க தேவையான நிதி, அவசர உதவி செய்ய வேண்டும்.
வறட்சியின் காரணமாக கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கவும், விவசாய பம்ப்செட்டுகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சி பணிகளை விரைவுபடுத்த மாநில அரசு மாவட்டங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, உள்கட்டமைப்புகளை தயார் செய்து வரும் வேளையில், மத்திய அரசின் நிதி உதவியும் தேவைப்படுகிறது.
வறட்சி நிலவரத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய, மத்திய குழுவை உடனடியாக கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
