/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர்களுக்கு முதல்வர் இரவு விருந்து 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை
/
அமைச்சர்களுக்கு முதல்வர் இரவு விருந்து 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை
அமைச்சர்களுக்கு முதல்வர் இரவு விருந்து 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை
அமைச்சர்களுக்கு முதல்வர் இரவு விருந்து 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை
ADDED : அக் 14, 2025 05:00 AM

பெங்களூரு: அமைச்சர்களுக்கு முதல்வர் சித்தராமையா அளித்த விருந்தில், அமைச்சரவை மாற்றம், ஜி.பி.ஏ., தேர்தல் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில், முதல்வரின் இல்லமான காவேரியில் அமைச்சர்களுக்கு நேற்று இரவு முதல்வர் சித்தராமையா விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
விருந்தின் போது, அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு தடை; அமைச்சரவை மாற்றம், கிரேட்டர் பெங்களூரு ஆணைய தேர்தல், மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தல்; ஜாதிவாரி ஆய்வு; பீஹார் சட்டசபை தேர்தல், நிதி பயன்பாடு போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.
நற்பெயர் எடுங்கள் இதில், முதல்வர் சித்தராமையா கூறியதாக வெளியான தகவல்:
நாம் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. அமைச்சர்கள், அவரவர் துறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். இந்த அரசு, சாதாரண மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். அவரவர் துறைகள் மூலம் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்து, நல்ல பெயர் பெற வேண்டும். வாக்குறுதி திட்டங்களால், தொகுதி வளர்ச்சி பணிகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். இது அனைத்தும் விரைவில் நிவர்த்தியாகும்.
மாநிலத்துக்கு வருவாயை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, மக்கள் நல பணிக்கு செயல்படுத்துங்கள். துறைகளுக்கு கூடுதலாக நிதியும் வழங்கப்படும்.
அமைச்சரவை மாற்றம் அமைச்சரவை மாற்றம் நடைபெறும்; எனவே தயாராக இருங்கள். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள். கட்சி உயர்மட்ட குழு, உங்களின் நடவடிக்கையை கண்காணித்து வருகிறது. ஊடகங்கள் வெளியிடும் அமைச்சரவை மாற்றம் குறித்து கவலைப்பட வேண்டாம். நேரம் வரும்போது கட்சி மேலிட தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பர். வளர்ச்சி பணியில் கவனம் செலுத்துங்கள்.
பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கட்சி மேலிடம் எந்த நேரத்திலும் உத்தரவு பிறப்பிக்க கூடும். கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்தவுடன், பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருங்கள்.
இவ்வாறு அவர் பேசியதாக கூறப்படுகிறது.
ஜி.பி.ஏ., தேர்தல் கூட்டத்துக்கு பின், அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், ''இரவு விருந்தில் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, இட்லி இருந்தன. ஊறுகாய் இல்லை. அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்துகளை முதல்வரும், துணை முதல்வரும் கேட்டனர். என் துறையின் செயல்பாடு குறித்து முதல்வர் கேட்டார். ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு கூட்டம் நடப்பது வழக்கம்,'' என்றார்.
அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ''யுகாதியின் போதே அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இன்று சைவ உணவு மட்டுமே சாப்பிட்டேன். கூட்டத்தில் ஜி.பி.ஏ.,வின் ஐந்து மாநகராட்சி தேர்தல், மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை மாற்றம், அமைச்சர்களின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் பற்றி விவாதிக்கவில்லை. புரட்சி எதுவும் ஏற்படாது. இது அபத்தமான விஷயம்,'' என்றார்.
வராதது யார்? இரவு விருந்தில், அமைச்சர்கள் போசராஜ், சிவராஜ் தங்கடகி, மங்கள் வைத்யா ஆகியோர் அனுமதி பெற்று, இதில் பங்கேற்கவில்லை. அமைச்சர் மல்லிகார்ஜுன் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.
முன் அனுமதியும் பெறவில்லை என தகவல்கள் கூறுகின்றன.