
நடிகை குஷி ரவி, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில், பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையே வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். இதை இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்குகிறார். இந்த வெப் சீரிசுக்கு, 'அய்யன மனே' என, பெயர் சூட்டியுள்ளனர். அனைத்து வீடுகளும் சொர்க்கமாக இருப்பது இல்லை. இங்கு மறைக்கப்பட்ட பல விஷயங்கள் இருக்கும் என்ற அம்சங்களை வைத்து, திரைக்கதை பின்னியுள்ளனர். ஏழு எபிசோடுகள் உள்ள வெப் சீரிசில், குஷி ரவி, அக்ஷய் நாயக், மானசி சுதீர் நடித்துள்ளனர். பல மர்ம முடிச்சுகள் நிறைந்தது. ஒவ்வொரு காட்சிகளும் ஆர்வத்தை துாண்டும் வகையில் கதையை கொண்டு செல்கிறார்களாம். இம்மாதம் 25ம் தேதி முதல், ஜி5 ஓ.டி.டி.,யில் வெளியிடப்படுகிறது.
கன்னடத்தில் 'உபாத்யாயா' படத்தில், நாயகியாக அறிமுகமானவர் நடிகை மலைகா வசுபால். படம் நன்றாக ஓடியதால் தொடர் வாய்ப்புகளை பெறுகிறார். தற்போது 'வித்யாபதி' என்ற படத்தில் நடிக்கிறார். இது அவரது இரண்டாவது படமாகும். மாறுபட்ட வேடங்கள் கிடைப்பதால், மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். இந்த படத்தில் அவர் வித்யா என்ற ஸ்டார் நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தன் தொழில் வாழ்க்கையில், திருப்புமுனையாக அமையும் என, நம்புகிறார். பட வாய்ப்புகள் குறையாத நிலையில், சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்தது. அதிலும் நடிக்கிறார். இவர் சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்கு வந்தவர் என்பதால், சின்னத்திரை மீதான பற்று மலைகாவுக்கு சிறிதும் குறையவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கலபுரகியில் ரவுடிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரி மல்லிகார்ஜுன் பண்டே பலியானார். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. திறமையான, நேர்மையான போலீஸ் அதிகாரி ரவுடியின் தாக்குதலுக்கு ஆளானது, மக்களை பெரிதும் பாதித்தது. இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரான, 'பண்டே சாஹேப்' திரைப்படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது. நடிகர் சரண் டீசர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். மல்லிகார்ஜுன் பண்டே கதாபாத்திரத்தில் நடிகர் சந்தோஷ் ராம் நடித்துள்ளார். நாயகியாக காவ்யா பரத்வாஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் சின்மய் ராம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கோபண்ணா தொட்மனி தயாரிக்கிறார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
'ஹிட்லர் கல்யாணா' என்ற தொடரில் நடித்த நடிகை தீபிகா ஆராத்யா, வெள்ளித்திரையில் நுழைந்து 'சப்ளையர் சங்கரா' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படம் இம்மாதம் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இவருக்கு பட வாய்ப்பு தேடி வந்ததே சுவாரஸ்யமான விஷயம். 'சப்ளையர் சங்கரா' படத்திற்கு பிரவீன் குமார், நாயகியை தேடி வந்தார். அப்போது சோஷியல் மீடியாவில, தீபிகா ஆராத்யாவின் போட்டோக்களை பார்த்து, படத்துக்கு இவரே பொருத்தமாக இருப்பார் என, நினைத்து இவரை நாயகியாக தேர்வு செய்தாராம். கதை பிடித்ததால் இவரும் நடிக்க சம்மதித்தார். பல்லாரி பகுதியில் நடக்கும் அழகான காதல் கதையை படமாக்கியுள்ளனர். காவ்யா என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்காக பல்லாரி பாணி கன்னட மொழியை கற்றுக்கொண்டார்.
ரோஹித் கீர்த்தி இயக்கத்தில், நடப்பாண்டு ஜனவரி 31ல் திரைக்கு வந்த 'பாரு பார்வதி' திரைப்படம், பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தீபிகா தாஸ், பூனம் சிர்னாயக், பவாஜ் அஸ்ரப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது பயணம் தொடர்பான கதையாகும். பெங்களூரு, கோவா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்டில் படப்பிடிப்பு நடந்திருந்தது. அழகான இடங்களை தேடிப்பிடித்து, படத்தில் காட்டியுள்ளனர். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி, படக்குழுவினருக்கு நிம்மதி அளித்தது. திரைப்பட விமர்சகர்களும் பாசிடிவ் கருத்துகளை தெரிவித்திருந்தனர். அதிகமான மக்களை சென்றடையும் நோக்கில், தற்போது பிரைம் வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.