
ஏ.ஐ.,யில் தயாரான படம்
சமீப நாட்களாக அனைத்து துறைகளிலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சினிமா துறையிலும் நுழைந்துள்ளது. லவ் யூ என்ற படம் ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தி தயாராகியுள்ளது.
இது குறித்து இயக்குனர் நரசிம்ம மூர்த்தி கூறுகையில், ''ஏற்கனவே திரைப்படங்களின் பல்வேறு பிரிவுகளில் ஏ.ஐ., தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாங்கள் முழுமையாக இதே தொழில்நுட்பம் பயன்படுத்தி தயாரித்துள்ளோம். திரையுலகில் அரிய சாதனையாகும். இது வெறும் படம் அல்ல. புரட்சி. படத்துக்கு 20 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளோம். ஏ.ஐ., தொழில் நுட்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் செலவானது,'' என்றார்.
அமைதியும், புயலும்
மனிதனின் வாழ்க்கையை பற்றி விவரிக்கும் கதை கொண்ட, காவிரி தீரதல்லி திரைப்படம், திரைக்கு வர தயாராகிறது. கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'வாழ்க்கை என்பது கடல் போன்றது. சில நேரங்களில் அமைதியாக இருக்கும்; சில நேரங்களில் புயல் வீசும். எப்போது என்ன நடக்கும் என்பதை, யாராலும் ஊகிக்க முடியாது. இதை மையமாக கொண்டு திரைக்கதை பின்னியுள்ளோம்.
'துமகூரு, கோலார், சிக்கபல்லாபூர், ஹொஸ்பேட், பாகல்கோட், விஜயபுரா சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. புதுமுகம் உதய் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சுப்ரிதா ராஜ் நடித்துள்ளார். இம்மாதம் 25ம் தேதி படம் திரைக்கு வருகிறது' என்றனர்.
'கெஸ்ட் ரோல்'
சின்னத்திரை தொடர் மூலமாக, நடிப்பு பயணத்தை துவக்கிய நடிகை மேகா ஷெட்டி, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்கிறார். கன்னடம், தமிழில் வாய்ப்புகள் குவிகிறது. அதற்காக சின்னத்திரையை மறக்கவில்லை. 'முத்து சொசே' தொடரில் நடிக்கிறார்.
இது குறித்து, அவரிடம் கேட்ட போது, ''இந்த தொடரில் நான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். தற்போது கன்னடத்தில் ஆப்டர் ஆப்பரேஷன் லண்டன் கபே, சீத்தா, கிராமயணா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கிறேன்,'' என்றார்.
கதை சீக்ரெட்
மேக்ஸ் திரைப்படம் வெற்றியடைந்த குஷியில், நடிகர் சுதீப், தன் அடுத்த படம் பில்லா ரங்கா பாஷா படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'ஆறேழு ஆண்டுகளாக, இந்த படத்துக்காக இயக்குனர் அனுாப் பண்டாரி, நடிகர் சுதீப் பணியாற்றுகின்றனர். இது இவர்களின் காம்பினேஷனில் தயாராகும், இரண்டாவது படமாகும். இரண்டு பாகங்களில் தயாராகிறது.
'படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளோம். இதில் புதிய கெட்டப்பில் சுதீப்பை பார்க்கலாம். இம்மாதம் 16ம் தேதி படப்பிடிப்பை துவக்கினோம். தெலுங்கில் ஹிட்டான ஹனுமான் படத்தை தயாரித்த நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பில்லா ரங்கா பாஷா தயாரிக்கின்றனர்' என்றார்.
நடிப்பில் திருப்தி
நடிகை அர்ச்சனா ஜோயின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், 'யுத்த காண்டா' திரைப்படம் இன்று வெளியாகிறது. இது குறித்து, அர்ச்சனா ஜோயிஸ் கூறுகையில், ''கே.ஜி.எப்.,பில் நான் ஏற்றிருந்த அம்மா கதாபாத்திரம், எனக்கு ஒரு வகையில் வரமாகவும், மற்றொரு பக்கம் சாபமாகவும் உள்ளது, எனக்கு அம்மா கதாபாத்திரங்களே தேடி வருகின்றன.
'ஒரே விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதில், எனக்கு விருப்பம் இல்லை. எனவே வாய்ப்புகளை நிராகரித்தேன். தற்போது திரைக்கு வரும் 'யுத்தகாண்டா'வில் தன் சிறு குழந்தைக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக போராடும், நிவேதிதா என்ற தாயின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதில் நடித்ததில் எனக்கு திருப்தி அளிக்கிறது,'' என்றார்.
ஆட்டோ ஓட்டுநர் கதை
ஆட்டோ ஓட்டுநர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வலிகள் தொடர்பான கதை கொண்ட ஆட்டோ சாலகா திரைப்பட டிரெய்லர், சமீபத்தில் வெளியானது. ஆயுஷ் சசிகுமார் இதனை இயக்கியுள்ளார்.
படத்தின் கதை குறித்து, அவரிடம் கேட்ட போது, ''கொரோனா நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், பல கஷ்டங்களை அனுபவித்தனர். இதை மையமாக கொண்டு திரைக்கதை பின்னியுள்ளோம். புதுமுக நடிகர் சிரந்த், நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நந்தினி நடிக்கிறார். மைசூரு, வருணா, முருடேஸ்வரா உட்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்துக்கு சென்சார் போர்டு, யு.ஏ., சான்றிதழ் அளித்துள்ளது,'' என்றார்.