
ராஜீவ் கொலை கதை
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, ரமேஷ் இயக்கத்தில் திரைக்கு வந்த 'சையனைட்' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது அதன் முந்தைய பாகத்தை தயாரிக்க ரமேஷ் திட்டமிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. 'சையனைட்' படம் திரைக்கு வந்தபோது, ராஜிவ் படுகொலை பற்றி ஏன் சொல்லவில்லை என, பலரும் கேள்வி எழுப்பினர். எனவே படுகொலை சம்பவத்தில் வெளிச்சத்துக்கு வராத விஷயங்களை சேகரித்து படமாக்க ரமேஷ் முடிவு செய்துள்ளார். இந்த படம் திரைக்கு வந்த பின், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரீஸ் தயாரிக்கவும் ரமேஷ் திட்டமிட்டுள்ளார். இதற்காக இலங்கை, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என, பல நாடுகளுக்கு சென்று, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களை சந்திக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
இயக்குனர் அவதாரம்
சஸ்பென்ஸ், திரில்லர் கதை கொண்ட 'ஜாவா காபி' திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. நடிகை சான்விகா இந்த படத்தை தயாரித்து, இயக்குவதுடன் கதை, திரைக்கதை எழுதியது, சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு உட்பட, ஒன்பது முக்கிமான பொறுப்புகளை ஏற்றுள்ளார். பலர் செய்யும் பணிகளை, இவர் ஒருவரே செய்து அசத்தியுள்ளார். பெங்களூரு, மங்களூரு, கேரளாவின் சில இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சான்விகா, நடிகர் அஜய் வர்தனுக்கு ஜோடியாவும் நடித்துள்ளார். சான்விகாவின் பூர்வீகம் கேரளா என்றாலும், முதலில் கன்னடம் வழியாக திரையுலகில் நுழைந்தார். இந்த படத்தை கன்னடத்துடன், தமிழ், மலையாளம் என, பன்மொழிகளில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்.
இடது கை பிரச்னை
பொதுவாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களை, பலரும் ஏளனமாக பார்ப்பார்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லவும் தயங்குவர். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் அனுபவிக்கும் பிரச்னை, மன வலியை மையமாக கொண்டு, கன்னடத்தில் தயாரான திரைப்படம், ஜூன் 13ல் திரைக்கு வருகிறது. இப்படத்துக்கு 'யெட கையே அபகாதக்கே காரணா' என, பெயர் சூட்டியுள்ளனர். சமர்த் கடிதோள் இப்படத்தை இயக்கியுள்ளார். இது இவரது முதல் படமாகும். திகந்த் நாயகனாக, அவருக்கு ஜோடியாக நிதி சுப்பையா நடித்துள்ளனர். இதில் இடது கை பழக்கம் உள்ளவராக திகந்த் நடித்துள்ளார்.
'த' எழுத்து காரணம்
வினய் வாசுதேவ் நாயகனாக நடித்து, இயக்கிய 'த' திரைப்படம், நேற்று முன் தினம் திரைக்கு வந்தது. படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ளதால், படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். படத்துக்கு 'த' என, டைட்டில் வைக்க காரணம் உள்ளது. படத்தில் நாயகனின் பெயர் தீபு. நாயகியாக நடித்துள்ள திஷா ரமேஷின் பெயரிலும் தி உள்ளது. தேவராயன துர்கா, தேவரமனே உள்ளிட்ட இடங்களில், படப்பிடிப்பு நடந்தது. இந்த இடங்களின் பெயரிலும், த உள்ளது. எனவே இந்த பெயரை வைத்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதியதும் வினய் வாசுதேவ்.
வக்கீலுக்கு விருது
திரைப்பட அகாடமி சார்பில், ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம் விருது, திரைக்கதை சிறந்த உரையாடல், நடிகர், நடிகையருக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு சிறந்த திரைக்கதைக்காக அனுபமா ஹெக்டேவுக்கு விருது கிடைத்துள்ளது. இதுவரை இவர் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். சமீபத்தில் பெங்களூரின் சவுடய்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. வக்கீலான இவர், சிறந்த எழுத்தாளராகவும் பிரசித்தி பெற்றார்.
தமிழில் தடம் பதிப்பு
நடிகர் கோமல் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். அதன்பின் குணச்சித்திரம் உட்பட, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, ஹீரோவாக உயர்ந்தார். இப்போது முதன் முறையாக, தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். சிவாஜி பிரபு நாயகனாக நடிக்கும், 'ராஜ்புத்திரன்' படத்தில் கோமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது உருவப்படம் கொண்ட போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மே 30ம் தேதி திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வந்த பின், தமிழிலும் ஒரு ரவுண்ட் வருவார் என, ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை துாண்டியுள்ளது.