
* மருத்துவச்சி வாழ்க்கை
கிராமத்து பின்னணியில் தயாரான, தாயவ்வா திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. சாத்விக் பவன் குமார் இயக்கத்தில், கீதப்பிரியா நடித்துள்ளார். கதை குறித்து இயக்குனர் கூறுகையில், ''இது அழகான கிராமத்து கதையாகும். கிராமத்தில் வசிக்கும் மருத்துவச்சியின் வாழ்க்கை, அவரது சமூக அக்கறையை படத்தில் காண்பித்து உள்ளோம். அடுத்த மாதம் திரைக்கு வரும். மூத்த நடிகை உமாஸ்ரீ திரைப்பட டைட்டில் வெளியிட்டார், மூத்த நடிகர் ஸ்ரீநாத் டிரெய்லர் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தில் தயாரிப்பாளர் கீதப்பிரியாவே, மருத்துவச்சி தாயவ்வா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,'' என்றார்.
* நினைத்ததை முடிப்பவர்
நடிகை சைத்ரா ஆச்சார் ஒவ்வொரு படத்திலும், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து, ராசியான நடிகைகள் வரிசையில் இடம் பிடித்துள்ளார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மார்னமி என்ற படத்தில் நடிக்கிறார்.
இது குறித்து, அவர் கூறுகையில், ''இந்த படத்தில் தீக்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மனதில் தோன்றியதை செய்யும் பெண்ணின் கதாபாத்திரமாகும். படத்தின் கதை யாராலும் ஊகிக்க முடியாதது. இயக்குனர் கதையை கூறிய போதே, எனக்கு பிடித்து விட்டது. படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணி நடக்கிறது. எப்போது திரைக்கு வரும் என, ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.
* காமெடி பிளஸ் ஹாரர்
கன்னடத்தில், கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, கிரிட்டிக்கல் கீர்த்தனகளு என்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய சேத்தன் ஷெட்டி, முதன் முறையாக இயக்குனராகி, 'சீட் எட்ஜ்' என்ற படத்தை இயக்குகிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ''படத்தில் இளம் நடிகர் சித்து மூலிமனிகே நாயகனாகவும், இவருக்கு ஜோடியாக ரவீக்ஷா ஷெட்டி நடிக்கின்றனர். படம் காமெடியுடன், ஹாரர், திரில்லர் கதை கொண்டதாகும். ரசிகர்களுக்கு பிடித்தமான அனைத்தும் படத்தில் உள்ளன. உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து, சுதந்திரமாக இந்த படத்தை இயக்கி உள்ளேன், படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளோம்,'' என்றார்.
* 'கேர் டேக்கர்'
நடிகை பிரியங்கா உபேந்திரா நடிக்கும், பாலிவுட் திரைப்படம் செப்டம்பர் 21 திரைப்பட படப்பிடிப்புக்கு, படக்குழுவினர் தயாராகின்றனர். இது குறித்து பிரியங்கா கூறுகையில், ''முதன் முறையாக இள வயது பெண் இயக்குனர் கரென் க்ஷிதி சுவர்ணவுடன் பணியாற்றுகிறேன். நோயாளிக்கு பணிவிடை செய்யும் 'கேர் டேக்கர்' கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பெங்களூரில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. என் கதாபாத்திரத்தின் பெயர் கமலா. பன்மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. நான் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவள். எனவே ஹிந்தி பேசுவது எனக்கு கஷ்டமாக இல்லை,'' என்றார்.
* நடிகர் பெயர் மாற்றம்
நடிகர் ஷைன் ஷெட்டி, ஏராளமான படங்களை கையில் வைத்துள்ளார். தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகிறார். இது குறித்து, அவர் கூறுகையில், ''கலைஞன் என்றால் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என, நினைக்க கூடாது. சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். நித்ரா தேவி நெக்ஸ்ட் டோர் என்ற படத்தில், வில்லனாக நடிக்கிறேன்.
''எனக்கு ஹீரோவாகவும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஜஸ்ட் மேரிட் படத்தில் நாயகனாக நடித்துள்ளேன். இதிலும் என் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. தற்போது என் பெயரை மாற்றியுள்ளேன். என் தந்தையின் பெயர் சரஷ் சந்திர ஷெட்டி. எனவே ஷைன் சரஷ் ஷெட்டி என, மாற்றிக் கொண்டேன்,'' என்றார்.
* திருமணத்துக்கு பின்...
நடிகை சோனல் மந்த்ரோவுக்கு, திருமணத்துக்கு பின்னரும் பட வாய்ப்புகள் குவிகின்றன. இவர் நாயகியாக நடித்த மாதேவா ஜூன் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இது குறித்து, அவர் கூறுகையில், ''திருமணத்துக்கு பின், நான் நடித்த மாதேவா திரைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராபர்ட் திரைப்படத்தில் நானும், வினோத் பிரபாகரும் தனு, ராகவா கதாபாத்திரத்தில் நடித்திருந்தோம்.
''நாங்கள் மீண்டும் இணைந்து நடித்த மற்றொரு படம் திரைக்கு வருகிறது. படத்தின் கதையை வினோத் பிரபாகர் என்னிடம் கூறினார். பிடித்ததால் நடிக்க சம்மதித்தேன். இது தவிர மேலும் சில படங்களில் தடிக்கிறேன். படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக, திரைக்கு வரும்,'' என்றார்.
***