
எஸ்.நாராயண் இயக்கத்தில், துனியா விஜய், ஷ்ரேயஸ் மஞ்சு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் மாருதா பிர்மாண்டமாக தயாராகிறது. பெரும் எதிர்பார்ப்பை துாண்டியுள்ளது. படத்தில் இந்தியாவின் பிரபலமான இசை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். சமீபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியாகி, சூப்பர் ஹிட்டானது. வரும் நாட்களில் மற்ற பாடல்களையும் வெளியிட, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எஸ்.நாராயண் பிரபலமான இயக்குனர்; பல வெற்றி படங்களை கொடுத்தவர். துனியா விஜய் ஸ்டார் ஹீரோ. ஷ்ரேயஸ் தயாரிப்பாளர் மஞ்சுவின் மகன்; வளர்ந்து வரும் இளம் நாயகன். இம்மூவரின் காம்பினேஷன் இருப்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
கவுந்தேயா என்ற பெயரில் கிரைம், திரில்லர் கதை கொண்ட படம், திரைக்கு வர தயாராகிறது. ஒரு கொலையை சுற்றிலும் கதை நகர்கிறது. மூத்த நடிகர் அச்யுத்குமார், சரண்யா ஷெட்டி தந்தை, மகளாக நடிக்கின்றனர். ஓய்வின் எல்லையில் உள்ள இன்ஸ்பெக்டர் ரங்கநாத் என்ற கதாபாத்திரத்தில் அச்யுத் குமார் நடித்துள்ளார். பணியின் இறுதி நாட்களில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்புமுனைகள் கொண்ட கதையாகும். கிரைம் ரிப்போர்ட்டராக சரண்யா ஷெட்டி நடிக்கிறார். பெங்களூரு, மைசூரில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. படத்தில் பாடல்களே இருக்காதாம்.
மூத்த இயக்குனர் ராஜேஷ் பாபு, தன் மகன் யஷஸை ஹீரோவாக பார்க்கும் ஆசையில், பிளடி பாபு என்ற படத்தை தயாரித்து, இயக்குகிறார். சமீபத்தில் படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜூன் இறுதியில் படம் திரைக்கு வருகிறது. ஸ்மிதா நாயகியாக நடித்துள்ளார். பெங்களூரு, நந்தி மலை, சிக்கமகளூரு சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சைக்கலாஜிகள், ஆக்ஷன், திரில்லர் கதை கொண்டது. மகனுக்காக வெயிட்டான கதையை ராஜேஷ் பாபு தேர்வு செய்துள்ளார். படத்தை திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.
நடிகர் ஸ்ருஜன் லோகேஷ், ஜி.எஸ்.டி., படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். நாயகனும் இவரே. ஜி.எஸ்.டி., என்றால் 'கோ சீ இன் தியேட்டர்' என, அர்த்தமாம். இதில் இவரது மகன் சுக்ருத், முதன் முறையாக கன்னட திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். அது மட்டுமின்றி ஸ்ருஜனின் தாய் கிரிஜா லோகேஷும் நடித்துள்ளார். ஒரே படத்தில் பாட்டி, மகன், பேரன் என மூன்று தலைமுறையினர் நடித்து, புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளனர். படத்தில் பாட்டியும், பேரனும் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தில் தயாரிப்பாளர் சந்தேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை, ஆக்ஷன், திரில்லர் கதை கொண்டது.
காலம் மாறியும், அதிநவீனமாகியும் ஜாதி, தீண்டாமை என்ற அவல நிலை இன்னும் மாறவில்லை. உறுதியாக வேரூன்றியுள்ளது. மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற பாகுபாடு இப்போதும் உள்ளது. தற்போது திரைக்கு வந்துள்ள குலதள்ளி கீள்யாவுதோ திரைப்படமும், இத்தகைய கதை கொண்டது. உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி கொடுமைப்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக காட்டின் நடுவில் வாழும் பழங்குடியினர், அரசின் உத்தரவுபடி நகரத்துக்கு வருகின்றனர். அதன்பின் அவர்கள் அனுபவிக்கும் பிரச்னைகள், அதிலிருந்து அவர்களை காப்பாற்ற நாயகன் போராடுவதே கதையாகும்.
கன்னட நடிகை ஸ்ரீலீலா, சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்ட போட்டோக்கள், ரசிகர்கள் இடையே குறுகுறுப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீலீலா நெற்றியில் சுமங்கலி பெண்கள் குங்குமம், கன்னத்தில் மஞ்சள் வைக்கும் போட்டோக்கள் வெளியிட்டிருந்தார். பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலிப்பதாக வதந்தி பரவியது. இந்நிலையில் வெளியான போட்டோக்களை பார்த்து, ஸ்ரீலீலா ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டாரா என, கேள்வி எழுந்தது. ஆனால் அந்த போட்டோக்கள், அவரது பிறந்த நாளுக்காக எடுக்கப்பட்ட போட்டோக்கள். ஜூன் 14ல் இவரது பிறந்த நாள். இதை வித்தியாசமாக கொண்டாட, அவரது தாய் முடிவு செய்துள்ளார்.