
நடிகர் கிரண்ராஜ் நாயகனாக நடிக்கும், ஜாகி - 42 என்ற படத்தில், ஹிருதிகா சீனிவாஸ் நாயகியாக நடிக்கிறார். மாடர்ன் மற்றும் குடும்ப பாங்கு என, இரண்டு ஷேட்கள் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹிருதிகா சீனிவாஸ் தற்போது மலையாள திரைப்பட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அது முடிந்த பின், ஜாகி - 42 படப்பிடிப்பில் பங்கேற்பார். இது குதிரை பந்தயத்தை மையமாக கொண்ட கதையாகும். இந்த படம் திரைக்கு வந்த பின், தனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என, நம்புகிறார்.
கன்னட திரையுலகில் அனந்த்நாக், லட்சுமி ஜோடி மிகவும் பிரபலம். இவர்கள் இணைந்து நடித்த பல திரைப்படங்கள், சூப்பர் ஹிட்டானவை. ராசியான ஜோடி என, பெயர் பெற்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், இவர்கள் ராஜதுரோகி என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். கண் முன்னே இருந்தும், தாய், தந்தையை அடையாளம் தெரிந்து கொள்ளாத பிள்ளைகள், இவர்களே தங்களின் பிள்ளைகள் என, தெரிந்து கொள்ளாத பெற்றோர் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை, படத்தில் காண்பித்து உள்ளனர். இந்த சூழ்நிலையை பெற்றோர், பிள்ளைகள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதே கதையின் சாராம்சமாகும். படத்தில் பல திருப்பங்கள் உள்ளன.
பெரும்பாலும் புதியவர்களே சேர்ந்து தயாரிக்கும், மக்கி புஸ்தகா என்ற படத்தில், பிரபல பாடகர் கீரவாணி பாடியுள்ளார். இவர் பாகுபலி போன்ற வெற்றி படங்களில் பாடியவர். பல ஆண்டுகளுக்கு பின், கன்னடத்தில் பாடுகிறார். விஷ்ணுவர்த்தன் நடித்த படங்களில் பாடியுள்ளார். இந்த பாடத்தில் ஏழு பாடல்கள் உள்ளன. பிரபல பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் உட்பட, 18 பாடகர்கள் பாடியுள்ளனர். இது குழந்தைகளுக்கான படமாகும். பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கபட்டணா, மங்களூரு, ஹெச்.டி.கோட்டே சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்சார் முடிந்து, திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்கி, மாதக்கணக்கில் சிறையில் இருந்த நடிகை பவித்ரா கவுடா, ஜாமினில் வெளியே வந்த பின் கோவில் கோவிலாக தரிசனம் செய்தார். வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். அதன்பின் தன் சொந்த நிறுவனத்தை கவனிப்பதில், ஆர்வம் காட்டுகிறார். தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றன. மீண்டும் பட வாய்ப்புகளுக்கு அடிபோடுகிறாரோ என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தன் நிறுவன விளம்பரத்துக்காக, போட்டோ ஷூட் நடத்தினாராம். எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என, என மாடலுக்கு கற்றுத்தந்துள்ளார்.
பிரபல கன்னட நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுஸ்ரீ, மணமகளாக தயாராகிறார். பெங்களூரை சேர்ந்த ஐ.டி., நிறுவன தொழிலதிபர் ரோஷன் என்பவரை கரம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காதல் திருமணம் இல்லை. இரண்டு குடும்பத்தினரும் கலந்து பேசி, ஏற்பாடு செய்யும் திருமணமாகும். ஆகஸ்ட் 28ல் பெங்களூரில் ஆடம்பரமாக திருமணம் நடக்கவுள்ளதாம். அனுஸ்ரீக்கு கன்னடத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. திருமணத்துக்கு பின்னரும், அவர் நடிப்பது, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் ஈடுபடலாம் என, கூறப்படுகிறது.
நடிகர் விராட் பில்வா, இயக்குநராக மாறியுள்ளார். இவர் முதன் முறையாக இயக்கிய 'லவ் மாட்ரு' திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. தற்போது படத்தின் ரொமாண்டிக் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவரே நாயகனாகவும் அறிமுகமாகிறார். சூரி, பிரசாந்த் நீல், சைதன்யா போன்ற இயக்குநர்கள் அளித்த ஊக்கத்தால், விராட் பில்வா படம் இயக்குகிறார். இதில் சுமன் ரங்கநாத், சுஷ்மிதா கோபிநாத், அச்யுத் குமார், அனிதா பட் உட்பட, பலர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஏற்பாடு செய்கின்றனர்.