
* குட்டிக்கு வாழ்த்து
நடிகர் ஹர்ஷிகா பூனச்சா, நடிகர் புவன் பொன்னன்னா காதலித்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு ஸ்ரீதேவி என, பெயர் சூட்டியுள்ளனர். நடிப்பை குறைத்துக் கொண்ட ஹர்ஷிகா, மகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். தற்போது மகள், கணவருடன் வெளிநாடு சுற்றுலா சென்று வந்துள்ளார். வியட்நாம், இலங்கை, தாய்லாந்து நாடுகளில் கழித்த மகிழ்ச்சியான தருணங்களை, போட்டோக்களாக பதிவு செய்துள்ளார். படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அழகான இவரது குட்டி மகளுக்கு, வாழ்த்து குவிந்துள்ளது.
* பிரம்மாண்ட படம்
'ராமாயணா' படத்தின் படப்பிடிப்பை முடித்து, யு.எஸ்.,சுக்கு சுற்றுலா சென்ற நடிகர் யஷ், தற்போது 'டாக்சிக்' படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். கீது மோகன் தாஸ் இயக்கும் இப்படம், ஆக்ஷன், திரில்லர் கதை கொண்டதாகும். மும்பையின் கோரேகாவ் பிலிம் சிட்டியில், பிரம்மாண்ட செட் போட்டு படப்பிடிப்பு நடத்துகின்றனர். இந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் பெர்ரி, ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அதில் ஆக்ரோஷமான சாகச காட்சிகளும் இருப்பதால், 10 வல்லுநர்களின் உதவியுடன் படப்பிடிப்பு நடக்கிறது. இது கன்னடம், ஆங்கிலம் உட்பட, பல்வேறு மொழிகளில் தயாராகிறது.
* மீண்டும் வருவாரா?
கன்னட திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ரம்யா. தமிழிலும் நடித்தவர். அரசியலுக்கு சென்ற இவர், நடிப்புக்கு முழுக்கு போட்டார். அரசியல் இருந்தும் ஒதுங்கினார். தற்போது தன் பட கம்பெனி மூலமாக, படங்களை தயாரித்து வருகிறார். இவர் மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக கூறப்பட்டது. ஆனால் நடிக்கவில்லை. கன்னட திரையுலகில், இவர் விட்டுச் சென்ற இடம், இப்போதும் காலியாகவே உள்ளது. இதற்கிடையே ரம்யாவும, வினய் ராஜ்குமாரும் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். ரம்யா மீண்டும் நடிக்க தயாராகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரை திரையில் பார்க்க, ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.
* புனித் ராஜ்குமார் சாயல்
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் கிரீட்டி நாயகனாக அறிமுகமான 'ஜூனியர்' திரைப்படம், திரைக்கு வந்து சக்கைப்போடு போடுகிறது. அனைத்து திரையரங்குகளிலும் நன்றாகவே கல்லா கட்டுவதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்த படம் பற்றி தகவல் வெளியானபோது, யாரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இப்போது படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள், புனித் ராஜ்குமாரை பார்த்தது போன்றுள்ளது என, கருத்து தெரிவித்துள்ளனர். சண்டைக்காட்சிகளில் புனித்தின் சாயல் தெரிகிறது. அவரது இடத்தை கிரீட்டி நிரப்புவார் என, கருத்து தெரிவித்துள்ளனர்.
* முதலீட்டில் ஆர்வம்
கன்னடத்தில் 'கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா'வில் அறிமுகமான நடிகை சஞ்சனா ஆனந்த், திரையுலகில் படிப்படியாக வளர்ந்து வருகிறார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுகிறார். இதற்கிடையே 'ஹனிமூன்' என்ற வெப் சீரிசிலும் நடித்துள்ளார். கன்னடத்துடன், தெலுங்கிலும் நடிக்கிறார். சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டார். சம்பாதிக்கும் பணத்தை நிலம், வீட்டு மனையில் முதலீடு செய்கிறாராம். சிறு வயதில் இருந்தே இவருக்கு பணத்தை சேமிக்கும் பழக்கம் உள்ளது. இப்போதும் ஷாப்பிங் சென்று, கண்டதை வாங்குவதில்லை. அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வாங்குவார்.
* சிக்ஸ் பேக் நடிகை
நடிகை நிஷ்விகா நாயுடு, சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ஜொலிக்கிறார். ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்கிறார். இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இதற்காக பல மணி நேரம் ஜிம்மில் செலவிடுகிறார். கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார். ஆண்களே வெட்கப்படும் அளவுக்கு சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது இவரது நடிப்பில் சில படங்கள் திரைக்கு வர தயாராகிறது. தற்போது இவர் 'மஹாநடி' ரியாலிட்டி ஷோவில் பிசியாக உள்ளார்.