
தாமரையின் மகிமை
மூத்த நடிகர் சுசேந்திர பிரசாத், திரைக்கதை, வசனங்கள் எழுதி இயக்கும் திரைப்படம் பத்மகந்தி . இது கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் தயாராகிறது.
இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், '' பத்மகந்தி என்றால், தாமரை என, அர்த்தமாகும். தாமரை ஏன் தேசிய மலரானது, ஒரு கட்சியின் சின்னமானது, பிரம்மன் இதன் மீது அமர்ந்திருப்பது ஏன், ஆயுர்வேதத்துக்கு பயன்படுத்துவது ஏன் என ஆராய்ந்தபோது, தாமரைக்கு 36,000க்கும் மேற்பட்ட பெயர்கள் இருப்பது அறிந்து ஆச்சர்யமளித்தது. இதை மையமாக வைத்து, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இதில் பரிபூர்ணா சந்திரசேகர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,'' என்றார்.
பாடலுக்கு வரவேற்பு
கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள பிராட் திரைப்படத்தின் பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியானது. இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், 'இப்பாடலை கன்னடம், தெலுங்கில் பாடகர் சித் ஸ்ரீராம், ஹிந்தியில் நிஹால் தபாரோ, தமிழ், தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளனர்.
'வரும் மாதம் படத்தின் மற்றொரு பாடல் வெளியிடப்படும். இயக்குநர் ஷஷாங்க், இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா காம்பினேஷனில் உருவான படம். இவர்கள் இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களும், சூப்பர் ஹிட்டாகின. அந்த வரிசையில் இப்படமும் இணையும் என, நம்புகிறோம். வரும் அக்டோபரில் படம், திரைக்கு வரும்' என்றனர்.
திகில் திரைப்படம்
கன்னட திரையுலகில் லிகித்குமார், இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்கிய முதல் திரைப்படம், விருத்தா இன்று திரைக்கு வருகிறது. கதை பற்றி, இயக்குநர் கூறுகையில், ''மாஹிர் மொஹியுதீன் நாயகனாக நடித்துள்ளார். சித்தார்த் என்ற கதாபாத்திரத்தை சுற்றிலும் கதை நகரும்.
ஒரு இரவில் நடக்கும் கதை. ஒரு போன் அழைப்பு நாயகனின் வாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ''அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே, கதையின் சாராம்சம். திகில், திரில்லாக இருக்கும். பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்து வரும்,'' என்றார்.
மாறுபட்ட கதாபாத்திரம்
நடிகர் கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே, மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம், ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தற்போது நடிகர் யஷ்ஷின் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும், கொத்தலவாடி படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதை பற்றி அவரிடம் கேட்டபோது, ''கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் நிலையில் நான் இல்லை. விருப்பமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு, சிலருக்கு மட்டுமே கிடைக்கும். தொடர்ந்து போலீஸ் வேடங்கள் வந்தபோது, மறுத்துள்ளேன். என்னை மாறுபட்ட கதாபாத்திரங்களில் காண விரும்பும் இயக்குநர்கள், எனக்கு வாய்ப்பு அளிக்கின்றனர். கொத்தலவாடி யிலும் மாறுபட்ட கதாபாத்திரம் கிடைத்துள்ளது,'' என்றார்.
போலீஸ் வேடம்
பீமா திரைப்படத்தில், இன்ஸ்பெக்டர் கிரிஜா கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகை பிரியா ஷடமர்ஷனா. இப்போது அடுத்தடுத்து போலீஸ் வேடங்களில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தற்போது கஸ்டடி, கும்ப சம்பவா , காந்தி ஸ்கொயர் ஆகிய மூன்று படங்களில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். பீமா வில் நான் ஏற்றிருந்த கிரிஜா கதாபாத்திரத்துக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 20க்கும் மேற்பட்ட படங்களில், இதே கதாபாத்திரங்கள் தேடி வந்தன.
''இவற்றில் மாறுபட்ட கதைகள் கொண்ட படங்களை தேர்வு செய்து கொண்டேன். எனக்கு படப்பிடிப்புக்கு செல்வதாக தோன்றவில்லை. போலீஸ் பணிக்கு செல்லும் உணர்வு தோன்றுகிறது,'' என்றார்.
புலம்பெயர்ந்தவர்களின் கதை
வட மாவட்டங்களை சேர்ந்தவர்களே இணைந்து, ஹுலிபீரா திரைப்படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. கதை குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'படத்தின் நாயகனின் பெயர் ஹுலிபீரா. கிராமங்களில் துணிச்சலாக செயல்படும் இளைஞர்களை இப்படி அழைப்பர்.
'படத்தின் நாயகனும் அது போன்ற வீரம் நிறைந்தவர் என்பதால், அதே பெயரை சூட்டினோம். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு புலம் பெயரும் இளைஞர்களை தடுக்கும் நாயகன், அவர்களின் பிரச்னைகளை எப்படி தீர்க்கிறார் என்பதே கதை. பாதாமி சுற்றுப்பகுதி கிராமங்களில், இரண்டு கட்டங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அஞ்சன், நாயகன் சைத்ரா, நாயகியாக நடிக்கின்றனர்' என்றனர்.