
நடிக்க வந்த அரசியல்வாதி!
முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா, நீண்ட இடைவெளிக்கு பின், சர்காரி நியாயபெலே அங்கடி என்ற படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ராகினி திரிவேதி நாயகியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் குறித்து கேட்ட போது, ''இது அழகான கிராமத்து கதை கொண்டது. கிராமத்தின் அரசு நியாயவிலை கடையில் நடக்கும் ஊழல்களை எதிர்த்து, பெண்ணொருவர் எப்படி போராடுகிறார் என்பதே கதையாகும். அந்த கதாபாத்திரத்தை நான் ஏற்றுள்ளேன். அரசியல்வாதி சிவராமேகவுடாவும், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், என்றார்.
பாசப்பிணைப்பை கூறும் படம்!
நாடகங்கள் மூலம், நடிப்பை கற்று திரையுலகில் நுழைந்த நடிகை ரிஷா கவுடா, ஆழமாக வேரூன்றுகிறார். கையில் ஏராளமான படங்களை வைத்துள்ளார். தற்போது, 'ஆஸ்டினின் மஹான் மவுனா' என்ற படத்தில் நடிக்கிறார். படம் பற்றி ரிஷா கவுடா கூறுகையில், இதில் ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தந்தை, மகளின் பாசப்பிணைப்பை கூறும் கதையாகும். 1990ல் தந்தை, பிள்ளைகளின் உறவு எப்படி இருந்தது என, காட்டுகிறோம். அன்றைய குடும்பங்களில் மகள்களை எப்படி வளர்த்தனர், குடும்ப உறவுகள் குறித்தும், படத்தில் காணலாம். எனக்கு மாறுபட்ட கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன, என்றார்.
குமாரின், 'லவ் யு முத்து'
கன்னடத்தில் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா உட்பட, பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் குமார், தற்போது, லவ் யு முத்து என்ற படத்தை இயக்குகிறார். கதை குறித்து, அவர் கூறுகையில், ''என்னை பொறுத்த வரை, இது சாதாரண கதை அல்ல. நானே திரைக்கதை எழுதி இயக்கும் பொழுது போக்கு மற்றும் காதல் கதையாகும். சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிரபலமான சித்து மூலிமனி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெங்களூரு உட்பட, பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நடப்பாண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வருவோம், என்றார்.