
காத்திருப்பு
கர்நாடகா மட்டுமின்றி, இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம், காந்தாரா சேப்டர் - 1 . ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் இத்திரைப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தற்போது படக்குழுவினர் பட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்கின்றனர். சில நாட்களுக்கு முன், நாயகி ருக்மிணி வசந்த் போஸ்டரை வெளியிட்டனர். இப்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யாவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
குலசேகரன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். இவர் பாலிவுட்டில் அதிகம் நடிக்கிறார். ஆனால் அவர் கன்னடர். நாடகத்தில இருந்து, திரையுலகுக்கு வந்தவர். வெப் சிரீஸ்களிலும் நடிக்கிறார்.
பாசப்பிணைப்பு
கர்நாடக ரக்ஷனா வேதிகே தலைவர் பிரவீண் ஷெட்டியின் மகன் பிரவீர் ஷெட்டி நாயகனாக நடித்த, சைரன், என்கேஜ்மென்ட் என்ற படங்களில் நடித்தவர். தற்போது நித்ராதேவி நெக்ஸ்ட் டோர் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டன. இது தாய், மகனின் பாசப்பிணைப்பை விவரிக்கும் கதை கொண்டதாகும். இந்த படத்தில் மூத்த நடிகை சுதாராணி, நாயகனின் தாயாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரிஷிகா நாயக் நாயகியாக நடித்துள்ளார். ஷைன் ஷெட்டி, ஸ்ருதி ஹரிஹரன் உட்பட, பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 12ல் திரைக்கு வருகிறது.
தொழில்நுட்ப வசதி
விக்ரம் ரவிசந்திரன் நடிக்கும், முதோல் திரைப்பட படப்பிடிப்பு பணிகள், பாதியில் நின்றிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இன்னும் சில நாட்கள் உரையாடல் காட்சியை படமாக்க வேண்டியுள்ளது. அக்டோபர் இறுதியில் திரைக்கு வரவுள்ளது. விக்ரம் ரவிசந்திரனுக்கு ஆண்டுக்கு ஐந்து முதல் 10 படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதற்கான தொழில்நுட்ப வசதி, கன்னட திரையுலகில் இல்லை என, வருந்துகிறார். இத்திரைப்படம் திரைக்கு வந்த பின், வேறு படத்தில் கவனம் செலுத்துவார். கதைகள் கேட்டு வருகிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பெரும்பாலும் புதியவர்களே நடிக்கும், ஸ்கூல் மேட்ஸ் திரைப்பட பாடல், சமீபத்தில் வெளியானது. இப்பாடலை எழுதி, இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் ஹம்சலேகா. இது, சங்கர் இயக்கும் முதல் படமாகும். இனாயத் பிரசன்ன ஷெட்டி நாயகனாகவும், யஷ்விகா நிஷ்கிலா, ரஜனி நாயகியராகவும் நடித்துள்ளனர்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை கொண்டது. செப்டம்பரில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன; அனைத்தும் நன்றாக வந்துள்ளதாம்.