
பேசட்டுமே!
நடிகை ராகினி திரிவேதி, போல்டான கதாபாத்திரங்களில் நடித்தவர். இப்போதும் கை நிறைய படங்களை வைத்துள்ளார். இவர் சமீப நாட்களாக நடிகர் ராஜவர்தனுடன் நெருக்கமாக தென்படுகிறார். இவர்களுக்குள் காதல் உள்ளதாக, சோஷியல் மீடியாக்களில் கிசுகிசுக்கள் பரவியுள்ளன.
இதுகுறித்து, ராகினியிடம் கேட்டபோது, “நாங்கள் ஜாவா என்ற படத்தில், இணைந்து நடிக்கிறோம். திரையுலகில் வளர வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு உள்ளது. படத்தில் எப்படி நடிக்க வேண்டுமோ, அப்படி நடிக்கிறோம். நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கிறோம். மக்கள் கமென்ட் செய்கின்றனர். இது தவறல்ல. அவர்களுக்கு தோன்றியதை பேசுகின்றனர். இதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை,” என்றார்.
* ஏன் பேசுகிறீர்கள்?
நடிகை ரம்யா எரிச்சலில் உள்ளார். மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தை சேர்ந்த இளம் நடிகர் வினய் ராஜ்குமாருக்கும், ரம்யாவுக்கும் 'சம்திங் சம்திங்' என, பேசுவதே ரம்யாவின் எரிச்சலுக்கு காரணம். இதுகுறித்து, ரம்யா கூறுகையில், “வினய் குமார் திறமையான நடிகர். எங்களுக்குள் நல்ல நட்பு உள்ளது. அவர் என் தம்பியை போன்றவர். மக்கள் எளிதாக எதை எதையோ யூகிக்கின்றனர். இவர்களின் கற்பனையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சில இடங்களில் ஒன்றாக தென்பட்டதால், கண்டபடி விமர்சிப்பதும், பேசுவதும் சரியல்ல,” என, பொரிந்து தள்ளுகிறார்.
* அதிர்ஷ்ட நடிகை
குடகில் இருந்து திரையுலகுக்கு வந்தவர்களில், நடிகை மோக்ஷா குஷாலும் ஒருவர். இவர் நாயகியாக நடிக்கும், 'மோட கவித வாதாவரணா' திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து, மோக்ஷா கூறுகையில், “குறும்படங்களில் நடித்த நான், திரையுலகுக்கு வந்து தனஞ்செயாவுடன், 'கோடி' என்ற படத்தில் அறிமுகமானேன். முதல் படமே ஸ்டார் ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, என் அதிர்ஷ்டம். இப்போது நான் நடிக்கும், 'மோட கவித வாதாவரணா' திரைப்படமும், பிரபல இயக்குநர் சிம்பல் சுனியின் படமாகும். படப்பிடிப்பு முடிந்துள்ளது. நவம்பரில் திரைக்கு வரும். இதில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது,” என்றார்.
* தயாரிப்பாளரான நடிகர்
பல படங்களில் நடித்த பின், பட தயாரிப்பு, இயக்குவது என நடிகர்கள் அவதாரம் எடுப்பர். இவர்களின் வரிசையில் நடிகர் பிரஜ்வல் தேவராஜும் சேர்ந்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், “எங்கள் பட தயாரிப்பு கம்பெனிக்கு, 'பி2 புரொடக்ஷன்' என, பெயர் வைத்துள்ளோம். சமீபத்தில் பூஜை செய்து, கம்பெனி பெயரை அறிவித்தோம். என் தம்பி பிரணம் நடித்த 'சன் ஆப் முத்தண்ணா' படத்தை தயாரித்த, புராதனா பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிப்போம். என் நடிப்பில் 'மாபியா' திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. என் தம்பி பிரணம் நடிக்கும், அடுத்த படத்தை எங்கள் பட கம்பெனி மூலமாக தயாரிப்போம்,” என்றார்.
* இயக்குநர் வருத்தம்
சந்துரு ஓபய்யா இயக்கி, நடித்துள்ள 'ராமா அண்ட் ராமு' திரைப்பட டிரெய்லர் வெளியானது. கதை குறித்து இயக்குனரிடம் கேட்டபோது, “துப்புரவு தொழிலாளர்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்னைகள், இதற்கு தீர்வு காண்பதில், பொது மக்களின் பங்களிப்பு பற்றிய கதையாகும். பேஸ்புக்கில் நான் பார்த்த வீடியோ, இத்திரைப்படம் இயக்க என்னை ஊக்கப்படுத்தியது. சாலையை சுத்தம் செய்யும் துப்புரவு பெண், ஒரு வீட்டு முன் நின்று தண்ணீர் கேட்கிறார். இவரிடம் அந்த வீட்டினர் நடந்து கொண்ட விதம், எனக்கு வருத்தம் அளித்தது. சுற்றுச்சூழலை சுத்தமாக்கும் துப்புரவு தொழிலாளிகளை, நாம் மதிக்க வேண்டும். இதில் சவும்யா நாயகியாக நடித்துள்ளார்,” என்றார்.
* கதை கேட்கும் நாயகி
நடிகை ஐஸ்வர்யா பிஸ்சே, வெள்ளித்திரையில் இருந்து, சின்னத்திரைக்கு சென்று, பிரபலமடைந்தவர். இப்போது மீண்டும் வெள்ளித்திரைக்ககு வந்துள்ளார். இதுகுறித்து, ஐஸ்வர்யா பிஸ்சே கூறுகையில், “எனக்கு படங்களை விட, சின்னத்திரை தொடர்களில் அதிக ஆர்வம் உள்ளது. தெலுங்கில் நான் நடித்த தொடர், 1,000 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தொடர்களில் நடிப்பதால், சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. எனக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு பிடித்தமானதாக இல்லை. கதைகள் கேட்டு வருகிறேன்,” என்றார்.
***