தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : செப் 20, 2025 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசபக்தி கதை

நடிகர் உபேந்திரா, தற்போது நாகண்ணா இயக்கும், பார்கவா திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இதைத் தொடர்ந்து உபேந்திரா, மூத்த இயக்குநர் ஓம் பிரகாஷ் இயக்கும், கொரில்லா வார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஓம் பிரகாஷ், பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அடுத்து அவர் இயக்கப்போவது, 50வது படமாகும். இந்த படத்தில் உபேந்திரா ராணுவ வீரராக நடிக்கிறார். செப்டம்பர் 18ம் தேதி, இவரது பிறந்த நாள். அன்று பட போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இது தேசபக்தியை அடித்தளமாகக் கொண்ட கதை. படப்பிடிப்பை முடித்து, நடப்பாண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அது அந்த காலம்

நடிகர் லிகித் ஷெட்டி, தேஜஸ்வினி சர்மா ஆகிய இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கும் புல் மீல்ஸ் திரைப்படம், திரைக்கு வர தயாராகிறது. அந்த காலத்தில் பாடல்கள் கேசட்களில் வெளியிடப்பட்டன. இப்போது டிஜிட்டல் யுகமாகிவிட்டது. கேசட்கள் மாயமாகிவிட்டன. அந்த காலத்துக்கு புல் மீல்ஸ் படக்குழுவினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த திரைப்படத்தின் பாடல்களை கேசட்டுகளாக வெளியிட்டனர். இசை அமைப்பாளர் குருகிரண், கேசட்டை டேப் ரிகார்டில் போட்டு பாடலை வெளியிட்டார். பாடல் சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறதாம். நவம்பர் 21ல் படம் திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பு டிரெய்லர் வெளியாகும்.

உண்மை சம்பவம்

இயக்குநர் குமார் இயக்கிய, லவ் யூ முத்து திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் டைட்டில் பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் சாஸ்திரி இசை அமைத்த பாடலை, சோனு நிகம், ஐஸ்வர்யா ரங்கராஜன், சுரபி பரத்வாஜ் பாடியுள்ளனர். சித்து மற்றும் ரேஷ்மா நடனமாடியுள்ளனர். குமட்டா, பெங்களூரு உட்பட, பல்வேறு பகுதிகளில், 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மஹாராஷ்டிராவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னியுள்ளனர்.

நடிகர் விருப்பம்

நடிகர் யஷ் நடித்து, தயாரிக்கும் டாக்சிக் திரைப்படம், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஹாலிவுட் சாகச இயக்குநர் ஜேஜே பெர்ரி சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். பிரமாண்டமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடக்கவுள்ளது. இதற்கிடையே யஷ், லண்டனுக்கு பறந்துள்ளார். தன் படத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பது, அவரது விருப்பம். இதுகுறித்து, பேச்சு நடத்தும் நோக்கில் அவர் லண்டனுக்கு சென்றுள்ளாராம். அங்கிருந்து திரும்பிய பின், பெங்களூரில் இறுதிகட்ட படப்பிடிப்பில் பங்கேற்பார்.

தாய்மொழிக்கு வரவு

நடிகை வர்ஷா பொள்ளம்மா, கர்நாடகாவை சேர்ந்தவர். ஆனால் கன்னடத்தில் நடித்தது இல்லை. தமிழில் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்தார். இப்போதே முதன் முறையாக கன்னடத்தில் அறிமுகமாகிறார். மஹான் என்ற படத்தில் விஜய் ராகவேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார். விஜய் ராகவேந்திரா, வர்ஷா பொள்ளம்மாவுக்கு பிடித்தமான நடிகர். அவருடன் நடிப்பதால் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார். கன்னடத்தில் ஒரு ரவுண்ட் வருவார் என, ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் நம்ரதா கவுடா, ராதிகா நாராயணனும் நடிக்கின்றனர். விவசாயிகள் பற்றிய கதை கொண்ட படமாகும்.

கடற்கரை ரசிகை

நடிகை மோனிஷா விஜய்க்கு, கடற்கரை என்றால் மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், ஏதாவது கடற்கரைக்கு செல்வது அவரது வழக்கம். தற்போது தன் தோழிகளுடன் ஐந்து நாட்கள் சுற்றுலாவாக, மொரிஷியஸ் தீவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைகளை ரசித்து வருகிறார். விதவிதமான போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். கடற்கரைகளின் அழகை வர்ணித்துள்ளார். அடுத்த முறை இத்தாலி, லாஸ் ஏஞ்சலிஸ் செல்லவும் திட்டமிட்டுள்ளார். மோனிஷா தற்போது தன் தந்தை துனியா விஜய் இயக்கும், சிட்டி லைட்ஸ் படத்தில் நடிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us