
மல்லிகா பாத்திரம்
த ன் 16 வயதில் சின்னத்திரை வழியாக, நடிப்புக்கு வந்தவர் நடிகை சம்பதா. அதன்பின் திரையுலகில் நுழைந்த இவருக்கு, எக்கா திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. கராவளி திரைப்படத்தில், பிரஜ்வல் தேவராஜுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இவரது கையில் மூன்று படங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று தெலுங்கு படம். நான்கு ஆண்டுகளாக அவர் திரையுலகில் இருந்தாலும், குறிப்பிடும்படி படங்கள் அமையவில்லை. எக்கா திரைக்கு வந்தபின், அவருக்கு அடையாளம் கிடைத்துள்ளது. இதில் அவர் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாயகனுக்கு சமமான முக்கியத்துவம், நாயகிக்கும் இருந்தது.
மாணவர்களின் கதை
ந டிகை பிரியா ஷடமர்ஷனா, அடுத்தடுத்த படங்களில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நாராயண கவுடா தயாரிப்பில், கபில் இயக்கத்தில் உருவாகும், பீட் போலீஸ் என்ற படத்திலும் பிரியா ஷடமர்தனா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, நெலமங்களா போலீஸ் நிலையம் அருகிலேயே படப்பூஜை நடந்தது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. திறமையான மாணவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகின்றனர், அதனால் ஏற்படும் விளைவுகள் என்பதை, படத்தில் காட்டியுள்ளனர். பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில், 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
இரண்டாவது பாகம்
ந டிகர் விஜய் ராகவேந்திரா நடிப்பில், 2021ல் திரைக்கு வந்த சீதாராம் பினோய் சூப்பர் ஹிட்டானது. தற்போது இதன் அடுத்த பாகம், செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் என்ற பெயரில் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய தேவி பிரசாத் ஷெட்டி, இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இவரே கதை எழுதியுள்ளார். இதில் விஜய் ராகவேந்திரா, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது இவர் நடிக்கும் 50வது படமாகும். சில நாட்களுக்கு முன்பு, படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தவிர நான்கைந்து படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.
இயக்குநர் அறிமுகம்
இ துவரை உதவி இயக்குநராக பணியாற்றிய அமோல் பாட்டீல், இப்போது முதன் முறையாக இயக்குநராகிறார். உடாளா என்ற படத்தை இயக்குகிறார். இது வட கர்நாடக கதை தொடர்புடையதாகும். விஜயபுராவில் முழுமையான படப்பிடிப்பு நடத்தினர். படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு முடிந்துள்ளது. திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் தயாராகின்றனர். நாயகனாக பிருத்வி சாமனுர், இவருக்கு ஜோடியாக ஹிருதிகா சீனிவாஸ் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குநர் யோகராஜ்பட் தயாரித்துள்ளார்.
கொள்ளை கதை
ப ல சூப்பர்ஹிட் படங்களில், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் தீக்ஷித் ஷெட்டி நாயகனாக நடிக்கும், பேங்க் ஆப் பாக்ய லட்சுமி திரைக்கு வர தயாராகிறது. இவருக்கு ஜோடியாக பிருந்தா ஆச்சார்யா நடித்துள்ளார். வங்கிக் கொள்ளை தொடர்பான கதை கொண்டது. நகைச்சுவையுடன் கதையை கொண்டு சென்றுள்ளனர். சாது கோகிலா, கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே, பரத் உட்பட, பலர் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு அட்வைஸ்
ந டிகை சங்கீதா பட் சில மாதங்களாக, மாதவிடாய் பிரச்னையால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டபோது, கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சை செய்து, கட்டி அகற்றப்பட்டது. தான் நடிக்க வேண்டியிருந்த படப்பிடிப்பையும் முடித்த பின், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு இருந்தால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி, மற்ற பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மருத்துவமனையில் உள்ள சங்கீதா பட்டை, அவரது கணவர் சுதர்ஷன் ரங்கபிரசாத் கவனித்துக் கொள்கிறார்.