ADDED : ஜூலை 07, 2026 09:22 PM

சதாசிவநகர்: சாங்கி ஏரியில் குதித்து, கல்லுாரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரின் சிக்கபானவராவை சேர்ந்தவர் தேஜஸ்வினி, 20. கோரகுண்டேபாளையாவில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இறுதி ஆண்டு படித்தார். கல்லுாரியில் தன்னுடன் படித்த சக மாணவரை காதலித்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மால, அந்த காதலனுக்கு, 'மெசேஜ்' அனுப்பிய தேஜஸ்வினி, 'மல்லேஸ்வரம் சாங்கி ஏரியில் குதித்து தற்கொலை செய்ய உள்ளேன்' என கூறி இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலன், தேஜஸ்வினியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், சதாசிவநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்தனர். போலீசாரும், பெற்றோரும் இணைந்து, சாங்கி ஏரியின் நடைபாதையில் தேஜஸ்வினியை தேடினர்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, மாலை, 5:00 மணி வரை அந்த ஏரி பகுதியில், தேஜஸ்வினி சுற்றி திரிந்தது தெரிந்தது. அதற்கு பின் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று காலை, ஏரிக்கரையில் தேஜஸ்வியின் உடல் மிதந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அவரது பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தற்கொலை செய்தாரா; காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததா என, பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
