ஜி.பி.ஏ.,வில் 3 மாநகராட்சிகளை கைப்பற்ற காங்கிரஸ் திட்டம்
ஜி.பி.ஏ.,வில் 3 மாநகராட்சிகளை கைப்பற்ற காங்கிரஸ் திட்டம்
ADDED : ஜூலை 07, 2026 09:22 PM
- நமது நிருபர் -: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் ஐந்து மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், பெங்களூரில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நடக்கிறது. இப்பணி வரும், அக்டோபர் மாதம் வரை தொடரும் என தெரிகிறது. இதனால், நவம்பர் மாத துவக்கத்தில் ஜி.பி.ஏ., தேர்தல் நடத்தப்படலாம்.
இருப்பினும், காங்., - பா.ஜ., - ம.ஜ.த., என மூன்று கட்சியினரும் தேர்தல் பணிகளை சத்தமில்லாமல் துவங்கி விட்டனர். ஆளும் கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் எப்படியாவது தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.
தேர்தலுக்கான வியூகங்களை, முதல்வர் சிவகுமார் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பி.கே.ஹரிபிரசாத் ஆகியோர் முன்னின்று வகுக்கின்றனர்.
இருவரும், பெரிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், ஐந்து மாநகராட்சிகளில் குறைந்தது, மூன்று மாநகராட்சிகளையாவது கைப்பற்ற திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கான பணிகளையும் துவங்கி விட்டனர். காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தேர்தலில் எப்படியாவது காங்கிரசை வெற்றி பெறச் செய்து, தன் ஆளுமையை நிரூபிக்க, கழுகு போல சிவகுமார் காத்து கொண்டிருக்கிறார்.
அதே சமயம், எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பதால், காங்கிரசால் எளிதில் மூன்று மாநகராட்சிகளை கைப்பற்றி விட முடியாது.
மேலும், மத்திய அமைச்சரான குமாரசாமியும் ஜி.பி.ஏ., தேர்தலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
எந்நேரமும் தேர்தல் நடத்தப்படலாம். எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
எது எப்படியோ, இம்முறை ஜி.பி.ஏ., தேர்தலில் போட்டி பயங்கரமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
