ADDED : செப் 23, 2025 05:04 AM
பெலகாவி: பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவின், கட்டபிரபா கிராமத்தில் வசித்தவர் சுமித்ரா, 19. இவர் பெலகாவியின், சதாசிவ நகரில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தார். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று காலை, விடுதி சமையல் அறைக்கு வந்த சுமித்ரா, சிற்றுண்டியை வாங்கிக் கொண்டு, தன் அறைக்கு சென்று கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. சக மாணவியர் பல முறை கதவை தட்டியும் பதில் வரவில்லை.
சந்தேகமடைந்த மாணவியர், விடுதி வார்டனிடம் தகவல் கூறினர். அவர் வந்து கதவை தட்டியும் திறக்கவில்லை. கலக்கமடைந்த வார்டன், உடனடியாக மாணவியின் தந்தைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த போலீசார், அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமித்ரா துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இறப்பதற்கு முன்பு, அவர் எழுதி வைத்த கடிதத்தில், தன் தற்கொலைக்கு தானே காரணம் என குறிப்பிட்டுள்ளார். சுமித்ரா தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
ஏ.பி.எம்.சி., போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.