sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வருவாண்டி... தருவாண்டி... மலையாண்டி!

/

வருவாண்டி... தருவாண்டி... மலையாண்டி!

வருவாண்டி... தருவாண்டி... மலையாண்டி!

வருவாண்டி... தருவாண்டி... மலையாண்டி!


ADDED : ஆக 14, 2025 11:09 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ த்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

தல வரலாறு: நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தார். சிவனும் அவரை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தார். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோவில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், 'குழந்தை வேலாயுதர்' என்று பெயர் பெற்றார். பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், 'பழம் நீ' (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தை சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், 'பழநி' என மருவியது.

சித்தர் போகர் : இவர் இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர். சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார். பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும். சித்தர் போகரின் சமாதி இக்கோவிலுக்குள்ளேயே உள்ளது.

தம்பியை காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். 'சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கின்றனர். மலைக்கோவில் அடிவாரத்தில் 'பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.

மூன்றாம் படை வீடு: முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே 'மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., துாரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோவிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருஆவினன்குடி சிறப்பு: குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், 'திருஆவினன்குடி' என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார். பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம்.

இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்ய கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.

முருகனுக்கு அன்னாபிஷேகம்: சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோவிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோவிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

முதல் வணக்கம் இடும்பனுக்கே...: தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3:00 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5:00 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோவிலில் முருகனுக்கு பூஜை நடக்கும்.

காவடி துாக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.






      Dinamalar
      Follow us