வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு 3,000 தொழிற்சாலைகள் பாதிப்பு
வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு 3,000 தொழிற்சாலைகள் பாதிப்பு
ADDED : மார் 18, 2026 05:40 AM
பெங்களூரு: வர்த்தக காஸ் தட்டுப்பாட்டால், பீன்யா தொழிற் பகுதியில், 3,000 சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு பீன்யா தொழிற் பகுதி, ஆசியாவின் மிகப்பெரிய தொழிற் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு, 13,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன.
இதில், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள், காஸ் சிலிண்டரை நம்பி உள்ளன. மேற்காசியாவில் நடக்கும் போர் எதிரொலியால், இந்நிறுவனங்கள் விரைவில் மூடும் சூழலை எட்டி உள்ளது.
இது குறித்து, பீன்யா தொழிற்சாலைகள் சங்க முன்னாள் தலைவர் சிவகுமார் கூறியதாவது:
பீன்யா தொழிற் பகுதியில், உலோகம் தயாரித்தல், உணவு பதப்படுத்தல், வெல்டிங் மற்றும் பிற தொழில்கள் என 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் வர்த்தக காஸ் சிலிண்டரையே நம்பி உள்ளன.
கடந்த 10 நாட்களாக காஸ் வினியோகம் போதுமான அளவில் இல்லை. இந்நிலை நீடித்தால், இந்த தொழிற்சாலைகள் மூட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுத்தும்.
அத்துடன், முன்னதாக முன்பதிவு செய்த காஸ் சிலிண்டர்களும் வழங்குவதில்லை. இப்பிரச்னை தீவிரமடைவதற்கு முன், சம்பந்தப்பட்ட தொழில் துறை அதிகாரிகள் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் இதுவரை கூட்டம் நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு, மொத்த உற்பத்தி செலவில், 15 முதல் 30 சதவீதம் எரிவாயு செலவிடப்படுகிறது. இதில், எரிவாயு விலை உயர்வு, இத்தொழிற்சாலைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
