திட்டங்களை செயல்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை பட்ஜெட் தாக்கலுக்கு பின் கமிஷனர் ராஜேந்திரா பேச்சு
திட்டங்களை செயல்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை பட்ஜெட் தாக்கலுக்கு பின் கமிஷனர் ராஜேந்திரா பேச்சு
ADDED : மார் 29, 2026 03:33 AM
பெங்களூரு: ''திட்டங்களை செயல்படுத்த, மக்களின் ஒத்துழைப்பு தேவை,'' என, மேற்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கலுக்கு பின், கமிஷனர் ராஜேந்திரா பேசினார்.
மேற்கு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், கமிஷனர் ராஜேந்திரா பேசியதாவது:
மேற்கு மாநகராட்சியின், 2026 - 2027ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி. குடிமக்களுக்கு உயர்தரமான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம், அவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற உதவுவது எங்கள் முன்னுரிமை. துணை முதல்வர் சிவகுமார், நகர்ப்புற மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறிய ஆலோசனை மற்றும் அறிவுரையின்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இப்பணியில் என்னுடன் இணைந்து உழைத்த, அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். பெங்களூரு நகரின் வரலாறு, பெருமையை பிரதிபலிக்கும் முக்கிய நினைவு சின்னங்கள், கெம்பேகவுடா கோபுரம் போன்றவை சிறப்பான இடம் பெற்று உள்ளன. கெம்பேகவுடாவின் தொலைநோக்கு பார்வை நகர திட்டமிடலுக்கு எடுத்துக்காட்டு.
தனித்துவம் வேகமாக வளரும் நகரமான பெங்களூருக்கு, விரிவான திட்டமிடல், அதிகார பரவல் கொண்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, திறமையான நிர்வாக முறை போன்றவை தேவை என்பதை உணர்ந்த அரசு, நிர்வாக கட்டமைப்பை மாற்றி உள்ளது. பெங்களூரு நகரசபையில் இருந்து மாநகராட்சியாகவும், இப்போது ஜி.பி.ஏ.,வாகவும் உயர்ந்து உள்ளது. மக்களுக்கு விரைவாக பதில் அளிக்கும் வகையில், 5 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேற்கு மாநகராட்சி தனக்கே உரித்தான தனித்துவம் மற்றும் சிறப்பை பெற்று உள்ளது.
பழைய பெங்களூரின் பெருமையை தாங்கி நிற்கும் கல்வி மற்றும் வணிக பகுதியாக மல்லேஸ்வரம், மைசூரு நிர்வாக காலத்தில் உருவான பசவனகுடி, தொழில் புரட்சி செய்யும் ராஜாஜிநகர், சிறு மற்றும் நடுத்தர நிறுவன மையமான கோவிந்தராஜநகர், தொழில்நுட்ப மண்டலம் தாசரஹள்ளி, அமைதியான பகுதியான பத்மநாபநகர், வேகமாக வளரும் விஜயநகர் ஆகிய தொகுதிகள், எங்கள் மாநகராட்சியில் இருப்பது பெருமை.
அரசு திட்டங்கள், முன்னெடுப்புகளில் வெற்றிக்கு சமூக பங்களிப்பு முக்கியமானது. மாநகராட்சி எல்லைகளுக்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை. அவர்கள் ஆதரவு இல்லாவிட்டால், நாங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை அடைவது சாத்தியம் இல்லை. நீண்டகால இலக்குகளை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு, பொதுச்சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்நுட்பம் சார்ந்த நகரமயமாக்கல், சமூக நலன் போன்றவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
