/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் இறப்பு கணவர் மீது புகார்
/
திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் இறப்பு கணவர் மீது புகார்
திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் இறப்பு கணவர் மீது புகார்
திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் இறப்பு கணவர் மீது புகார்
ADDED : ஜூலை 31, 2025 10:58 PM

ஹூப்பள்ளி:: காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண், சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அவரை கணவரே கொலை செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஹூப்பள்ளி நகரின், மன்டூரு சாலையில் உள்ள, ஷீலா காலனியில் வசித்தவர் திவ்யா சலவாதி, 22. இவர் கால்சென்டரில் பணியாற்றினார்.
இவருக்கு ஷீலா காலனி பக்கத்தில் உள்ள கிருபா நகரில் வசிக்கும் சரண் அனந்தபுரா, 28. அறிமுகமானார். இது காதலாக மாறியது. இருவரும் எல்லை மீறி பழகியதால், திவ்யா கருவுற்றார்.
இந்த விஷயத்தை சரணிடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார். ஆனால் சரண் மறுத்தார்.
மனம் வருந்திய திவ்யா, வேறு வழியின்றி பென்டகேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் சரணை வரவழைத்து எச்சரித்து, புத்திமதி கூறினர்.
இதையடுத்து திருமணத்துக்கு சரண் சம்மதித்தார். ஒரு வாரத்துக்கு முன்பு, கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது, திவ்யா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று முன்தினம், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை சரண், சிடகுப்பி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதித்ததில் குழந்தை வயிற்றிலேயே இறந்திருப்பது தெரிந்தது.
வயிற்றில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தபோது, அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
தங்களின் மகள் மற்றும் குழந்தையின் இறப்புக்கு, சரண் தான் காரணம் என, திவ்யாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 'போலீசாரின் எச்சரிக்கைக்கு பயந்து, திருமணம் செய்து கொண்ட சரண், திவ்யாவின் வயிற்றில் இருந்த குழந்தையை அழிக்க முற்பட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன், கருக்கலைப்பு மாத்திரைகளை பலவந்தமாக, விழுங்க வைத்துள்ளார். இதுவே தாய் மற்றும் குழந்தையின் இறப்புக்கு காரணம்' என, போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை சரண் மறுத்துள்ளார். ''என் மனைவியை காப்பாற்ற, நான் அனைத்து முயற்சிகளையும் செய்தேன். ஆனால் பலன் அளிக்கவில்லை. நான் கருக்கலைப்பு மாத்திரை ஏதும் கொடுக்கவில்லை. விசாரணைக்கு நான் தயார்,'' என, கூறியுள்ளார்.
போலீசாரும் அவரை விசாரித்து வருகின்றனர். மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். 'அறிக்கை வந்த பின்னரே, கணவர் கொடுத்த கருக்கலைப்பு மாத்திரையால், திவ்யா இறந்தாரா அல்லது குறைப்பிரசவம் காரணமா என்பது தெரியும்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.