பெண்ணுக்கு ஆபாச 'மெசேஜ்' அனுப்பிய டிரைவர் மீது புகார்
பெண்ணுக்கு ஆபாச 'மெசேஜ்' அனுப்பிய டிரைவர் மீது புகார்
ADDED : மே 03, 2026 11:30 PM

ராம்நகர்: பூஜைக்கு நிர்வாணமாக வந்தால் 30 லட்சம் ரூபாய் தருவதாக, பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த கார் டிரைவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு தெற்கு மாவட்டம், தொட்டமனுகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் கிரண், 36. பெங்களூரில் வாடகை கார் டிரைவராக உள்ளார். இவர், தனது கிராமத்தில் வசிக்கும் 25 வயது இளம்பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு, 'வாட்ஸாப்' பில் மெசேஜ் அனுப்பினார்.
'பெங்களூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், பணத்தை இரட்டிப்பாக்க சிறப்பு பூஜை செய்ய உள்ளேன்; இந்த பூஜைக்கு நிர்வாணமாக பெண் தேவை; பூஜைக்கு நீ நிர்வாணமாக வந்தால் 30 லட்சம் ரூபாய் தருகிறேன்' என கூறி இருந்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.
கடந்த 30ம் தேதி இளம்பெண்ணிற்கு, மீண்டும் மெசேஜ் அனுப்பிய கிரண், நிர்வாணமாக வரும்படி கூறியதுடன், 'உடலில் மச்சம் இருந்தாலோ, ஆப்பரேஷன் செய்த தழும்பு இருந்தாலோ பூஜையில் பங்கேற்க முடியாது. இதனால் உனது நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்பி வை; புகைப்படத்தை பார்த்த பின் முடிவு செய்கிறேன்' என்று கூறி இருந்தார்.
ஆத்திரம் அடைந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். கடந்த 1ம் தேதி ராம்நகர் மகளிர் போலீசில் கிரண் மீது புகார் செய்தனர். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, இளம்பெண் நேற்று குற்றச்சாட்டு கூறினார்.
