/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடக்காத வேலைக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு 12 அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார்
/
நடக்காத வேலைக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு 12 அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார்
நடக்காத வேலைக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு 12 அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார்
நடக்காத வேலைக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு 12 அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார்
ADDED : ஜூன் 26, 2025 12:53 AM

பெங்களூரு : பெங்களூரு சாம்ராஜ்பேட் தொகுதியில் நடக்காத வேலைக்கு, போலி பில் தயாரித்து 55.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக 12 அரசு அதிகாரிகள் மீது, லோக் ஆயுக்தாவில், பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு விதான் சவுதா அருகே உள்ள, மாநில லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத்திற்கு, பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் நேற்று சென்றார்.
லோக் ஆயுக்தா ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வர ராவை சந்தித்து, பெங்களூரு சாம்ராஜ்பேட் தொகுதியில் அரசு பணியில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் அளித்தார்.
பின், ரமேஷ் அளித்த பேட்டி:
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தொகுதியான சாம்ராஜ்பேட்டில் 2020 - 2022ம் ஆண்டில் 47 அரசு பணிகளுக்கு டெண்டர் அழைக்கப்பட்டு 19 ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
ஒப்பந்ததாரர்கள் பணி எதுவும் செய்யாமல், பணிகளை செய்ததாக போலி பில் சமர்ப்பித்து மாநகராட்சியிடம் இருந்து 27.66 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
அதே 47 பணிகளுக்காக 2024 - 2025ம் ஆண்டில் 19 ஒப்பந்ததாரர்களுக்கு மீண்டும் 27.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போதும் வேலை எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் அரசுக்கு 55.32 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் மாநகராட்சியின் 12 அதிகாரிகள் மற்றும் 19 ஒப்பந்ததாரர்களின் பங்கு உள்ளது.
முறைகேட்டில் அமைச்சர் ஜமீர் அகமது கானின் உதவியாளர் அயூப்கான் ஈடுபட்டு உள்ளார். சாம்ராஜ்பேட் தொகுதியில் எந்த அரசு பணியையும், அயூப்கான் ஒப்புதல் இன்றி செய்ய முடியாது.
இந்த முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த, மாநகராட்சி தலைமை கமிஷனர், நிர்வாக அதிகாரிக்கும் புகார் கொடுத்துள்ளேன். முறைகேட்டில் ஈடுபட்ட மாநகராட்சியின் 12 அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.