/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறார் ராஜண்ணா மீது முதல்வரிடம் புகார்
/
தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறார் ராஜண்ணா மீது முதல்வரிடம் புகார்
தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறார் ராஜண்ணா மீது முதல்வரிடம் புகார்
தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறார் ராஜண்ணா மீது முதல்வரிடம் புகார்
ADDED : ஜூன் 19, 2025 11:28 PM

பெங்களூரு:நீதிமன்ற உத்தரவு இருந்தும், பால் கூட்டமைப்பு சங்க தேர்தலை நடத்த விடாமல் தடுப்பதாக, அமைச்சர் ராஜண்ணா மீது, முதல்வர் சித்தராமையாவிடம், கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக் புகார் செய்துள்ளார்.
ராய்ச்சூர், பல்லாரி, விஜயநகரா, கொப்பால் மாவட்டங்களை உள்ளடக்கிய, பால் கூட்டமைப்பு சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது.
உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிந்தும், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்ததால், தேர்தல் நடக்கவில்லை.
தேர்தலை நடத்த உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில் சிலர் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தலை உடனடியாக நடத்துமாறு, கடந்த 2ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை தேர்தலை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து விஜயநகரா மாவட்டத்தை சேர்ந்த, கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் ராய்ச்சூர், பல்லாரி, விஜயநகரா, கொப்பால் மாவட்டங்களை உள்ளடக்கிய பால் கூட்டமைப்பு சங்கத்திற்கு தேர்தல் நடத்த இதுவரை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவு, பல்லாரி மாவட்ட கலெக்டர் மேஜையில் உள்ளது. அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான்கு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு, தேர்தலை நடத்த விடாமல் கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா தடுக்கிறார்.
இதுபற்றி முதல்வர் சித்தராமையாவிடம் புகார் செய்துள்ளேன். அமைச்சரை அழைத்து பேசுவதாக கூறி உள்ளார். ராஜண்ணாவுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை. தேர்தல் நடக்க வேண்டும் என்பது என் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ராஜண்ணா கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் நடந்து கொள்வோம். யாருடைய பேச்சை கேட்டுக் கொண்டும், தேர்தல் நடக்கவிடாமல் நான் தடுக்கவில்லை. பீமண்ணா நாயக் வயிற்று எரிச்சலில் பேசுகிறார்.
''என்னை அழைத்து கேட்டால், முதல்வருக்கு விளக்கம் கொடுக்க தயாராக உள்ளேன்,'' என்றார்.