/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மிம்ஸ் மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என புகார்
/
மிம்ஸ் மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என புகார்
மிம்ஸ் மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என புகார்
மிம்ஸ் மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என புகார்
ADDED : மே 28, 2025 10:59 PM

'மாண்டியாவில் உள்ள அரசு சார்ந்த மிம்ஸ் மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பது இல்லை. மருந்துகள் பற்றாக்குறை உள்ளது, துாய்மை இல்லை' என, லோக் ஆயுக்தாவுக்கு தொடர்ந்து புகார் வந்தது.
எனவே, உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, நேற்று முன்தினம் மிம்ஸ் மருத்துவமனைக்கு, திடீர் ஆய்வு நடத்தினார். வார்டுகள், வளாகம், கழிப்பறை, மருந்துகள் சேகரிக்கும் கிட்டங்கி உட்பட அனைத்து பகுதிகளிலும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு செய்தார். நோயாளிகளை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்தார்.
கிழிந்த மெத்தை
எலும்பு சிகிச்சை பிரிவின் ஆண்கள் வார்டில், கிழிந்த மெத்தைகள், துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளை கண்டு, நீதிபதி வீரப்பா கோபமடைந்தார். 'புதிய மெத்தைகள் வாங்க, உங்களிடம் பணம் இல்லையா, இத்தகைய மெத்தைகளில் நோயாளிகள் எப்படி படுக்க முடியும்' என கேள்வி எழுப்பினார்.
'வாட்டர் பில்டர் பழுதடைந்து இரண்டு மாதங்களாகிறது. அதை சரி செய்யவில்லை. குடிநீர் கிடைக்கவில்லை' என, நோயாளிகள் கூறினர். இதை கேட்ட நீதிபதி, 'வாட்டர் பில்டரை சரி செய்வதில், உங்களுக்கு என்ன பிரச்னை. குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் பரிதவிப்பது, உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா' என, மருத்துவமனை அதிகாரிகளை சாடினார்.
நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனையில் மணிக் கணக்கில் நின்று கொண்டிருப்பதை கவனித்த நீதிபதி, 'இவர்களுக்கு நின்று கொண்டிருக்கும் தண்டனையை, எதற்காக கொடுத்துள்ளீர்கள். உடனடியாக இருக்கை வசதி செய்யுங்கள்' என உத்தரவிட்டார்.
ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் வசதி பற்றி விசாரித்த போது, சில நோயாளிகள், 'மருத்துவமனையில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள கல்லஹள்ளி லே - அவுட்டுக்கு செல்ல, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 4,000 ரூபாய் கேட்கின்றனர்' என, நோயாளிகள் வருத்தம் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதி வீரப்பா, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அழைத்து, 'நிர்ணயித்த கட்டணம் மட்டுமே பெற வேண்டும். கூடுதல் பணம் கேட்டால் பணியில் இருந்து நீக்கும்படி செய்வேன்' என எச்சரித்தார்.
மருந்துகள் சேகரிப்பு மையத்தில் ஆய்வு செய்த போது, காலாவதியான மருந்துகளை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.
மருத்துவ அதிகாரி சிவகுமார், 'இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படவில்லை. டிஸ்போஸ் செய்வதற்காக வைத்திருக்கிறோம்' என மழுப்பலாக கூறினார். எரிச்சலடைந்த நீதிபதி, 'உடனடியாக குப்பை கூடையில் போடுங்கள்' என அறிவுறுத்தினார்.
பிரட்டில் பூஞ்சை
மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்தை, நீதிபதி ஆய்வு செய்த போது, காலாவதியான பிரட்டில் பூஞ்சை பிடித்திருப்பது தெரிந்தது. இதை கண்டு ஆவேசமடைந்த அவர், 'இந்த பிரட்களை தின்றால், நோயாளிகளின் கதி என்ன.
உணவக சமையலறையில் சிறிதும் துாய்மை இல்லை. சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாரான உணவுகளை நோயாளிகளுக்கு அளிக்கிறீர்களா' என கண்டித்தார்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளின் உறவினர்கள் நிறுத்தும் வாகனங்களுக்கு, இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பதும் தெரிந்தது.
மிம்ஸ் மருத்துவமனயில், பல குளறுபடிகள் இருப்பதை நேரில் கண்ட நீதிபதி வீரப்பா, 'இது என்ன மருத்துவமனையா அல்லது எமலோகமா. எந்த வசதியும் சரியில்லை. மெத்தைகள் கிழிந்துள்ளன. கழிப்பறை துர்நாற்றம் வீசுகிறது. ஆம்புலன்ஸ் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள். மருந்தகத்தில் காலாவதியான மருந்துகளை வைத்துள்ளீர்கள்.
'மருத்துவ கழிவுகள் ஏரியில் கலக்கிறது. இதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டிய நீங்கள், கடமையை மறந்துள்ளீர்கள். ஒழுங்காக பணியாற்ற முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள்' என, மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளை கடிந்து கொண்டார்.