கோவில்களில் அடிப்படை வசதிகள் இல்லை அதிகாரிகள் மீது புகார்
கோவில்களில் அடிப்படை வசதிகள் இல்லை அதிகாரிகள் மீது புகார்
ADDED : ஆக 02, 2026 01:01 AM
பெங்களூரு: ''பிரசித்தி பெற்ற கோவில்களில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. பல கோவில்களுக்கு சென்று, ஆய்வு செய்த போது, நாம் எந்த யுகத்தில் இருக்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. யாரும் பொறுப்புடன் பணியாற்றவில்லை. கோவில்களின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும்,'' என, துணை முதல்வர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரின், விதான்சவுதாவில், தார்மிக பரிஷத் உறுப்பினர்கள், அதிகாரிகளுடன், துணை முதல்வர் பரமேஸ்வர், நேற்று ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசியதாவது:
கர்நாடகாவின் கோவில்களில், அதிகமான பணம் உள்ளது. எனவே 'ஏ' மற்றும் 'பி' பிரிவு கோவில்களின் பெயரில், நிலம் வாங்க வேண்டும். அந்த சொத்து நிரந்தரமாக, அந்தந்த கோவில்களில் நிலைத்திருக்கும். கோவில்களை மேம்படுத்தலாம். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யவும், உதவியாக இருக்கும்.
கோவில்களில் உண்டியல் பணம், தவறாக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்த, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணியை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க வேண்டும். இந்த உத்தரவை அலட்சியப்படுத்த கூடாது.
மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளது. நான் பல கோவில்களுக்கு சென்று, ஆய்வு செய்தேன். நான் எந்த யுகத்தில் இருக்கிறோம் என்ற கேள்வி எழுந்தது.
யாரும் பொறுப்புடன் பணியாற்றவில்லை. கோவில்களின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும். கோவில்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
