கண்டக்டர், 'ரேபிடோ' டிரைவர் மனிதநேயம் பெங்களூரு பெண்ணின் நெகிழ்ச்சி வீடியோ
கண்டக்டர், 'ரேபிடோ' டிரைவர் மனிதநேயம் பெங்களூரு பெண்ணின் நெகிழ்ச்சி வீடியோ
ADDED : ஏப் 06, 2026 04:46 AM

பெங்களூரு: அதிகாலையில் தனியாக சாலையில் நின்ற தனக்கு பஸ் கண்டக்டர், ரேபிடோ பைக் டிரைவர் காட்டிய மனிதாபிமானம் குறித்து, பெங்களூரு பெண் பகிர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது.
பெங்களூரு காடுகோடியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்பவர் நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ:
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து காடுகோடி பி.எம்.டி.சி., பஸ் நிலையத்திற்கு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வந்தேன். பஸ் நிலையத்தில் இருந்து எனது வீடு 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. மிக குறுகிய துாரம் என்பதால் வாடகை கார், ஆட்டோக்கள் முன்பதிவாகவில்லை. என்ன செய்வது என தெரியாமல் நின்றேன். நடந்தே சென்று விடலாமா என்றும் யோசித்தேன்.
அப்போது அங்கு நின்ற பி.எம்.டி.சி., பஸ் கண்டக்டர் என்னிடம் வந்து பேசினார். 'பதற்றம் அடைய வேண்டாம்; உங்களுக்கு ஆட்டோ முன்பதிவாகும் வரை, உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன்' என்று கூறினார். சிறிது நேரம் பாதுகாப்பு அளித்தார். அந்த வழியாக வந்த ரேபிடோ பைக் டிரைவர், பைக்கை நிறுத்தினார். நான் அவரிடம் வாடகை கார், ஆட்டோ முன்பதிவு ஆகாதது பற்றி கூறினேன்.
என்னை வீட்டில் விடுவதாக கூறினார். எவ்வளவு பணம் என்று கேட்டேன். முதலில் உங்கள் இடத்திற்கு சென்று விடலாம் என்று கூறி அழைத்து சென்று, பத்திரமாக வீட்டின் முன்பு இறக்கி விட்டார். அவரிடம் எவ்வளவு பணம் என்று கேட்ட போது, பரவாயில்லை. அதிகாலை நேரத்தில் சாலையில் நிற்கும் உங்களை பத்திரமாக வீட்டில் சேர்ப்பது எனது பொறுப்பு என்று கூறினார். உங்களுக்கு எவ்வளவு தோன்றுகிறதோ அதை கொடுங்கள் என்றார். முன்பின் தெரியாத இருவர் எனக்கு உதவி செய்த போது, பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன். ஒரு பெண்ணாக, அந்த தருணம் எனக்கு பெரிய விஷயமாக இருந்தது.
இவ்வாறு வீடியோவில் பேசி உள்ளார்.
வீடியோ பரவிய நிலையில் பஸ் கண்டக்டர், ரேபிடோ பைக் டிரைவர் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
