பெண் இன்ஜினியர் மரணத்தில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பம்
பெண் இன்ஜினியர் மரணத்தில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பம்
ADDED : மே 07, 2026 11:20 PM

ஆடுகோடி: பெண் இன்ஜினியர் மரணத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அவர் எப்படி இறந்தார் என்ற காரணத்தை கண்டறிய முடியாமல், போலீசார் திணறுகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தை சேர்ந்தவர் பூஜா தத்தா, 33. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார். ஆடுகோடியில் வாடகை வீட்டில் வசித்தார். கடந்த மாதம் 27 ம் தேதி, இந்த வீட்டிற்குள் உடல் அழுகி நிர்வாண நிலையில் பூஜா உடல் மீட்கப்பட்டது.
ஜார்க்கண்டில் இருந்து வந்த பெற்றோரிடம் விசாரித்த போது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததால் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறினர்.
பூஜாவின் உடல், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் போலீசார் கையில் கிடைத்தது. அதில் பூஜா தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே நேரம் மரணத்திற்கான காரணம் குறித்தும் சரியான தகவல் வழங்கவில்லை.
இதனால் பூஜாவின் உடல் உறுப்பு மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு, போலீசார் அனுப்பி உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பூஜா வேலையை விட்டு உள்ளார். அப்படி என்றால் செலவுகளை எப்படி சமாளித்தார் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
அவர் வேலை செய்த நிறுவனத்தின், மனித வள மேலாளரிடம், பூஜாவின் வங்கிக்கணக்கு விபரங்களை பெறவும் முயற்சித்து வருகின்றனர். நண்பர்களிடம் ஏதாவது கடன் வாங்கினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
மொத்தத்தில் பூஜா இறந்து 12 நாட்களுக்கு மேல் ஆகியும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
