காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வருக்கு சிக்கல் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு
காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வருக்கு சிக்கல் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 26, 2026 02:49 AM

பெங்களூரு: பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தொடர்ந்த அவதுாறு வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வருக்கு, ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிக்கபல்லாபூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர். இவருக்கும், மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கும் இடையே, கடந்த 2024ம் ஆண்டு அரசியல்ரீதியாக வார்த்தை மோதல் ஏற்பட்டது.
பிரதீப் ஈஸ்வரை, முள்ளம்பன்றி, 'காமெடியன்' என்று பிரதாப் சிம்ஹா விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரதீப் ஈஸ்வரும், பிரதாப் சிம்ஹாவை, குரங்கு என்று விமர்சனம் செய்தார். அத்துடன் விடாமல் பிரதாப் சிம்ஹாவின் தந்தை பற்றியும், சில அவதுாறு கருத்துகளை கூறினார்.
இதனால் எம்.எல்.ஏ., மீது முன்னாள் எம்.பி., பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணைக்கு ஆஜராக பிரதீப் ஈஸ்வருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
நேற்று நடந்த விசாரணைக்கும், அவர் வராததால் கடுப்பான நீதிபதி சந்தீப் பாட்டீல், ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரன்டை, பிரதீப் ஈஸ்வர் மீது பிறப்பித்தார். அடுத்த விசாரணையை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
