/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., - எம்.எல்.சி.,யை சஸ்பெண்ட் செய்யும்படி பிடிவாதம்
/
காங்., - எம்.எல்.சி.,யை சஸ்பெண்ட் செய்யும்படி பிடிவாதம்
காங்., - எம்.எல்.சி.,யை சஸ்பெண்ட் செய்யும்படி பிடிவாதம்
காங்., - எம்.எல்.சி.,யை சஸ்பெண்ட் செய்யும்படி பிடிவாதம்
ADDED : ஜன 24, 2026 05:17 AM
'கவர்னரை வழிமறித்து அவமதித்த காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத்தை, மேல்சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என, பா.ஜ.,வினர் பிடிவாதம் பிடித்ததால், மேல்சபையில் குழப்பம் நிலவியது.
பெங்களூரு விதான்சவுதாவில், மேல்சபை கூட்டத்தொடர் நேற்று காலை துவங்கிய போது, சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, கேள்வி நேரத்தை துவக்க முற்பட்டார். அப்போது, பா.ஜ.,வின் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் நாராயணசாமி, கவர்னரை காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத், வழிமறித்து அவமதித்ததை பற்றி விவாதிக்க அனுமதி வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே, காரசார வாக்குவாதம் நடந்தது. கவர்னரை வழிமறித்த விஷயம் குறித்து விவாதிக்க அனுமதிக்கும்படி, பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் போசராஜ்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கூட்டத்தின் நேரத்தை வீணடிக்க முயற்சிக்கின்றனர். சபை நடக்கக்கூடாது என்பது, அவர்களின் நோக்கம். எனவே தேவையற்ற விஷயங்களை பேசுகின்றனர். அரசியல் அமைப்புக்கு எதிரானவர்கள் யார், தேசிய கீதத்தை அவமதித்தது யார் என்பது, அனைவருக்கும் தெரியும்.
பா.ஜ., - ரவிகுமார்: எதிர்க்கட்சி தலைவர் எந்த விஷயத்தை குறிப்பிடுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை. அதற்குள் தடை போட்டால் எப்படி?
ம.ஜ.த., - போஜேகவுடா: மேல்சபை தலைவருக்கு எவ்வளவு கவுரவம் உள்ளதோ, அதே அளவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் இருக்கிறது. நீங்கள் எதிர்க்கட்சி தலைவர் பேசும் விஷயத்துக்கு அனுமதி அளிக்காவிட்டால், உறுப்பினரின் உரிமையை பறிப்பது போன்றாகும். அவருக்கு அனுமதி தாருங்கள்.
ஆளுங்கட்சி தலைமை கொறடா சலீம்: சபையில் யார் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது தெரியும். அரசியல் அமைப்பு மற்றும் தேசிய கீதத்தை அவமதித்தது யார்.
இந்த தருணத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரவுடி போன்று நடந்து, கவர்னரை அவமதித்த காங்கிரஸ் உறுப்பினரை (ஹரிபிரசாத்), சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யுங்கள். உடனடியாக அவரை மார்ஷல்கள் மூலமாக வெளியேற்றுங்கள் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
பதிலுக்கு காங்கிரசார், முதலில் கவர்னரை மத்திய அரசு திரும்ப அழைத்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் கைப்பாவையாக அவர் நடந்து கொள்கிறார் என, குற்றம் சாட்டினர்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி எழுந்து, 'உங்களுக்கு மானம், மரியாதை இல்லையா; பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது. இது போன்று நடந்து கொண்டால், சபையில் இருந்து வெளியேற்றுவேன்' என, எச்சரித்தார்.
சலவாதி நாராயணசாமி: கவர்னர் சம்பிரதாயப்படி, சட்டசபைக்கு வந்து உரையாற்றினார். அவர் எந்த வகையிலும் கடமை தவறவில்லை. கவர்னர் உரையை முடித்து கொண்டு, சபையில் இருந்து வெளியேறும் போது, இந்த சபை உறுப்பினரான ஹரிபிரசாத், கவர்னரை வழிமறித்து குண்டர் போல நடந்து கொண்டார். அவரை உடனடியாக சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யுங்கள்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் பயன்படுத்திய, குண்டர் என்ற வார்த்தையை கோப்பில் இருந்து அகற்றும்படி, காங்கிரஸ் உறுப்பினர்கள் பிடிவாதம் பிடித்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சலால், கூட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சபை தலைவர் கூட்டத்தொடரை தள்ளி வைத்தார்.

