/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் மாற்றம் வேண்டும் காங்., - எம்.எல்.ஏ., அதிரடி
/
முதல்வர் மாற்றம் வேண்டும் காங்., - எம்.எல்.ஏ., அதிரடி
முதல்வர் மாற்றம் வேண்டும் காங்., - எம்.எல்.ஏ., அதிரடி
முதல்வர் மாற்றம் வேண்டும் காங்., - எம்.எல்.ஏ., அதிரடி
ADDED : ஜூலை 28, 2025 05:52 AM

தாவணகெரே : ''காங்கிரஸ் மேலிடம் முன் அதிகார பகிர்வு குறித்து ஒப்பந்தம் நடந்து இருந்தால், முதல்வர் மாற்றம் நடக்க வேண்டும்,'' என்று, ஜகளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேவேந்திரப்பா கூறி உள்ளார்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று, காங்கிரஸ் மேலிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியாகிறது.
சிவகுமார் அணியின் ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன், மேலிடம் முன் ஒப்பந்தம் நடந்தது உண்மை தான் என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா கூறினார். நானே 5 ஆண்டுகளும் முதல்வர் என்று சித்தராமையா கூறி இருந்தார். பின், கட்சி மேலிடம் சொல்லுக்கு கட்டுப்படுவேன் என்று பல்டி அடித்தார். இதனால் முதல்வர் பதவி குறித்து, இதுவரை தெளிவான எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தாவணகெரேயின் ஜகளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேவேந்திரப்பா நேற்று அளித்த பேட்டி:
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்த போது, எனது தொகுதியில் நடக்க வேண்டிய பணிகள் குறித்து பேசினேன். அமைச்சர்களை பற்றி எந்த புகாரும் சொல்லவில்லை. சித்தராமையா, சிவகுமார் இடையில் முதல்வர் பதவிக்கு, கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதா என எனக்கு தெரியாது. ஒருவேளை ஒப்பந்தம் நடந்து இருந்தால், முதல்வர் மாற்றம் நடக்க வேண்டும். அது தான் நியாயம்.
ஆனாலும், தற்போது முதல்வர் பதவி காலியாக இல்லை. பதவி, அதிகாரம் பற்றி பேசும் அளவுக்கு, நான் பெரிய ஆள் இல்லை. கட்சியின் சாதாரண சிப்பாய். எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் பதவிக்கு முயற்சிப்பதில் தவறு இல்லை. எனக்கும் அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது.
எனது ஆசையை கட்சி மேலிடத்திடம் கூறுவேன். பதவி கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும் மகிழ்ச்சி தான். ஜாதி, சமூகத்தை பார்த்து தான், அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.