எம்.எல்.சி., தேர்தலில் 5வது இடத்திற்கு வேட்பாளரை அறிவித்துள்ள காங்கிரஸ்
எம்.எல்.சி., தேர்தலில் 5வது இடத்திற்கு வேட்பாளரை அறிவித்துள்ள காங்கிரஸ்
ADDED : ஜூன் 06, 2026 04:05 AM

பெங்களூரு: எம்.எல்.சி., தேர்தலில் ஐந்தாவது இடத்திற்கு, காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்துள்ளது.
கர்நாடக மேல்சபையில் எம்.எல்.சி.,க்களாக இருக்கும், ம.ஜ.த.,வின் கோவிந்தராஜு, காங்கிரசின் நசீர் அகமது, ஹரிபிரசாத், திப்பண்ணா, பா.ஜ.,வின் எம்.டி.பி.,நாகராஜ், பிரதாப் சிம்ஹா நாயக், சுனில் வல்யாபுரே ஆகியோரின், பதவி காலம் அடுத்த மாதம், 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, வரும், 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில், ஹரிபிரசாத், திப்பண்ணா கம்மனுார், மோகன், சிவண்ணா மலவள்ளி ஆகியோரை வேட்பாளராக அறிவித்தது.
எம்.எல்.சி.,க்களை, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வர்.
ஒரு எம்.எல்.சி.,யை தேர்வு செய்ய 29 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு தேவை. காங்கிரசுக்கு 140 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால் அவர்களால் நான்கு பேரை தேர்வு செய்ய முடியும்.
மொத்தம், 116 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டது போக, காங்கிரசுக்கு,24 எம்.எல்.ஏ.,க்கள் மீதம் இருப்பர்.
எதிர்க்கட்சியில் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர் குறுக்கு ஓட்டு போட்டால், காங்கிரஸ் ஐந்தாவது இடத்திலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது.
இந்நிலையில், 5வது இடத்திற்கு காங்கிரஸ் வேட்பாளரை நேற்றிரவு அறிவித்தது. கர்நாடக காங்கிரஸ் பொருளாளர் வினய் கார்த்திக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
