/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., கொறடா ரவிகுமார் பதவி நீக்கம் மேல்சபை தலைவரிடம் காங்., கோரிக்கை
/
பா.ஜ., கொறடா ரவிகுமார் பதவி நீக்கம் மேல்சபை தலைவரிடம் காங்., கோரிக்கை
பா.ஜ., கொறடா ரவிகுமார் பதவி நீக்கம் மேல்சபை தலைவரிடம் காங்., கோரிக்கை
பா.ஜ., கொறடா ரவிகுமார் பதவி நீக்கம் மேல்சபை தலைவரிடம் காங்., கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2025 11:05 PM

பெங்களூரு: தலைமை செயலர் ஷாலினி பற்றி ஆட்சேபனைக்குரிய வகையில் பேசிய, மேல்சபை எதிர்க்கட்சி கொறடா ரவிகுமாரை பதவி நீக்கம் செய்ய கோரி, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம், காங்கிரஸ் மனு அளித்துள்ளது.
காங்கிரஸ் அரசுக்கு எதிராக இரண்டு நாட்களுக்கு முன்பு, பெங்களூரு விதான் சவுதா காந்தி சிலை முன், பா.ஜ., - எம்.எல்.சி.,க்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட, மேல்சபை எதிர்க்கட்சி கொறடா ரவிகுமார், போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசும் போது, தலைமை செயலர் ஷாலினி குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசினார். இதை கண்டித்து, விதான் சவுதா போலீசில், நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் மனோகர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை, பெங்களூரில் உள்ள அவரது வீட்டில், நேற்று மனோகர் சந்தித்தார். தலைமை செயலர் பற்றி ஆட்சேபனைக்குரிய வகையில் பேசிய ரவிகுமாரை, எம்.எல்.சி., பதவியில் இருந்து நீக்கக் கோரி மனுக் கொடுத்தார்.
இதுகுறித்து பசவராஜ் ஹொரட்டி கூறுகையில், ''காங்கிரஸ் அளித்துள்ள மனுவின் அடிப்படையில், விளக்கம் கேட்டு ரவிகுமாருக்கு கடிதம் எழுதுவேன். அந்த கடிதத்திற்கு அவர் அளிக்கும் பதில் அடிப்படையில், அடுத்தகட்ட முடிவு எடுப்பேன். தனிப்பட்ட முயற்சியில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது,'' என்றார்.
ரோல் மாடல்
பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த பேட்டி:
தலைமை செயலர் ஷாலினி, எனக்கும், பெண்களுக்கும் ரோல் மாடலாக உள்ளார். மாநிலத்தின் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் பெரிய பொறுப்பு அவரிடம் உள்ளது. ஆனால் அவரை பற்றி, மேல்சபை எதிர்க்கட்சி கொறடா ரவிகுமார் விதண்டாவாதமாக கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் கலபுரகி கலெக்டர் பவுசியா தரணத்தை, பாகிஸ்தானில் இருந்து வந்தவர் என்று கூறினார்.
பெண்களை பற்றி, ரவிகுமார் மனநிலை என்ன மாதிரி உள்ளது என்பதை அவரது பேச்சு காட்டுகிறது. பெலகாவியில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், பா.ஜ., - எம்.எல்.சி., ரவி என்னை ஆபாசமாக திட்டினார். இதுபற்றி பா.ஜ., கட்சி தலைவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை; ரவியை கண்டிக்கவில்லை.
பெண்களுக்கு எதிரான மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும், பா.ஜ., தலைவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டதாக நான் உணருகிறேன். தன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கு பதிவு
இந்நிலையில் காங்கிரஸ் அளித்த புகாரின்படி, தவறான நோக்கத்தில் பேசுவது, பாலியல் தொல்லை, பொது இடத்தில் பெண் அவமதிப்பு என எம்.எல்.சி., ரவிகுமார் மீது மூன்று பிரிவுகளில் விதான் சவுதா போலீசார், நேற்று மாலையில் வழக்கு பதிவு செய்தனர்.