/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., அரசு கவிழும் சோமண்ணா ஆரூடம்
/
காங்., அரசு கவிழும் சோமண்ணா ஆரூடம்
ADDED : ஏப் 11, 2025 11:09 PM

ஹூப்பள்ளி: ''பா.ஜ., அரசு வீழ்ந்தது போல ஒப்பந்ததாரர்களால் காங்கிரஸ் அரசு கவிழும்,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்து உள்ளார்.
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று ஹூப்பள்ளியில் அளித்த பேட்டி:
ஒப்பந்ததாரர்களிடமிருந்து 40 சதவீத கமிஷன் வாங்கிய குற்றச்சாட்டால், பா.ஜ., அரசு மாநிலத்தில் வீழ்ந்தது. அதே போல, தற்போது காங்கிரஸ் அரசும் ஒப்பந்ததாரர்களால் கவிழும்.
முதல்வரின் நிதி ஆலோசகரே, கர்நாடகா ஊழலில் நம்பர் ஒன் என கூறி உள்ளார். எனவே, இந்த அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
முதல்வர் சித்தராமையா முன்பு போல் இல்லை. தற்போது, அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால், முதல்வர் போலவே தோன்றவில்லை. மாநிலத்தில் அவர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் நாற்காலியை தக்க வைத்து கொள்வதையே குறிக்கோளாக வைத்து உள்ளார்.
மாநிலத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கட்டப்படும் இடத்தினால், மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் அரசிடம் பணம் இல்லை. அவர்களின் கடை மூடப்பட்டு உள்ளது. அது பற்றி பேசுவதில் பலனில்லை.
கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில், கால்நடைகளுக்கு குடிநீர், தீவனம் வழங்குவதில் பிரச்னை உள்ளது. இது பற்றி சிந்திக்காமல், கவனத்தை திசை திருப்ப முயற்சி நடக்கிறது. இது முதல்வரின் செயலற்ற தன்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.

