விவசாயிகளின் கல்லறை மீது நடக்கும் காங்கிரஸ் சாதனை மாநாடு: அசோக்
விவசாயிகளின் கல்லறை மீது நடக்கும் காங்கிரஸ் சாதனை மாநாடு: அசோக்
ADDED : மே 18, 2026 11:25 PM

பெங்களூரு: ''விவசாயிகளின் கல்லறையில், காங்கிரஸ் அரசு, மாநாடு நடத்துகிறது,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வாக்குறுதிகள் திட்டங்கள் வழங்குவதில் மாநில அரசு பித்துப்பிடித்தது போன்று செயல்படுகிறது. மழை உட்பட பல காரணங்களால் நஷ்டமடையும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களுக்கென எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.
மாநிலத்தில், மா, பாக்கு, தக்காளி, வாழைப்பழம் போன்ற பயிர்கள் சேதமடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட எந்த இடத்துக்கும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்யவில்லை. நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை இன்னும் துவங்கவில்லை. ஆனால் துறை அமைச்சரோ, காங்கிரஸ் மாநாடு நடத்துவதில் தீவிரமாக உள்ளார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும் வீடு வீடாக சென்று மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பிதழ் வினியோகிக்கிறார். விவசாயிகளின் கல்லறையில் தான் காங்கிரஸ் அரசு சாதனை மாநாடு நடத்துகிறது.
பல்லாரியில் நடந்த சாதனை மாநாட்டுக்கு, அரசு கருவூலத்தில் இருந்து 20 கோடி ரூபாய் செலவழித்து உள்ளனர். துமகூரில் நடக்கும் மாநாட்டுக்கு, மாவட்ட கலெக்டர் 12 கோடி ரூபாய் கேட்கிறார். துமகூரில் நடப்பது காங்கிரஸ் மாநாடு. இம்மாநாட்டுக்கு யார் செல்வர்.
எங்கள் அரசு ஆட்சியில் இருந்த போது விவசாய வளர்ச்சி 17 சதவீதமாக இருந்தது. தற்போது 10.4 சதவீதமாக குறைந்து உள்ளது.
பால் உற்பத்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 700 கோடி ரூபாய் ஊக்கத்தொகை, இன்னும் நிலுவையில் உள்ளது.
நாட்டில் விவசாயிகள் தற்கொலை விகிதம் குறைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் அதிகரித்து, நாட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். இது தான் சித்தராமையா தலைமையிலான காங்கிரசின் ஆறாவது வாக்குறுதி.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீவிரம் காட்டும் மாநில காங்கிரஸ் தலைவர்கள், விவசாய பல்கலைக்கழக அறிவியல் பாட தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக, ஏற்கனவே சி.பி.ஐ., அதிகாரிகள், பலரை கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளனர். நீங்கள் என்ன விசாரணை நடத்தினீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
