அமைச்சர் ஜமீரின் பதவியை பறிக்க காங்கிரஸ் தீவிரம்
அமைச்சர் ஜமீரின் பதவியை பறிக்க காங்கிரஸ் தீவிரம்
ADDED : ஏப் 17, 2026 05:01 AM

பெங்களூரு: தாவணகெரே தெற்கு தொகுதியில், கட்சிக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டில், இரண்டு தலைவர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது. இப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானை, பதவியில் இருந்து நீக்க திரைமறைவில் முயற்சி நடக்கிறது.
ஓட்டுகள் பிரிந்தன தாவணகெரே தெற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த பின், காங்கிரசில் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இத்தொகுதியில் முஸ்லிம் தலைவர்கள், தங்களில் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.
இவ்விஷயத்தில், அமைச்சர் ஜமீர் அகமது கானும் தீவிரமாக முயற்சித்தார். ஆனால், தோட்டக்கலைத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன், பிடிவாதம் பிடித்து தன் மகன் சமர்த் சாமனுாருக்கு சீட் பெற்றார். தொகுதியில் இதுவரை சிறுபான்மை வாக்காளர்கள், காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தனர்.
அந்த சமுதாயத்தினருக்கு, சீட் மறுக்கப்பட்டதால், முஸ்லிம் தலைவர்கள் கோபத்தில் உள்ளனர். கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றாமல் ஒதுங்கினர். இதன் விளைவாக, முஸ்லிம் ஓட்டுகள் பிரிந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
தேர்தல் முடிவு வெளியாகாத நிலையிலும், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எம்.எல்.சி., அப்துல் ஜப்பாரை, சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.
மற்றொரு எம்.எல்.சி., நசீர் அகமது, முதல்வரின் அரசியல் செயலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது, கட்சியில் பெரும் சலசலப்புக்கு காரணமானது.
முஸ்லிம் தலைவர்கள், காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது இவர்களுடன் இணைந்து செயல்பட்ட, அமைச்சர் ஜமீர் அகமது கானை, பதவியில் இருந்து நீக்க திரை மறைவில் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியை காப்பாற்றி கொள்ள, அவரும் தீவிரமாக முயற்சிக்கிறார்.
முரண்டு சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று முன்தினம் இரவு, ஜமீர் அகமது கானுடன் ஆலோசனை நடத்தினார். பதவியை ராஜினாமா செய்யும்படி அவரது மனதை கரைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஜமீர் சம்மதிக்கவில்லை. நசீர் அகமதுவை போன்று, என்னையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கட்டும் என்று முரண்டு பிடிக்கிறார்.
சமீப நாட்களாக ஜமீர், சிறுபான்மை சமுதாய தலைவராக அடையாளம் காணப்படுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்கினால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம்.
எனவே திடீரென அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பதிலாக, கவுரவமாக அவரே ராஜினாமா செய்ய வைக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதற்காக அவரது மனதை மாற்றும் முயற்சி நடக்கிறது.
ஜாலி டூர் அல்ல தாவணகெரே தெற்கு தொகுதியில், காங்கிரஸ் தோற்றால் அதற்கான பொறுப்பை, ஜமீரின் தலையில் கட்ட தயாராகின்றனர். தோல்விக்கு அவரே பொறுப்பாளி எனக்கூறி ராஜினாமா கடிதம் பெறவும் கட்சியில் ஆலோசனை நடக்கிறது. இதை உணர்ந்துள்ள ஜமீர், தனக்கு எதிராக சதி நடக்கிறது என்று புலம்புகிறார்.
'நான் ஜாலியாக இருக்க கேரளாவுக்கு செல்லவில்லை. காங்., தேசிய பொதுச்செயலர் வேணுகோபாலின் உத்தரவுபடி, கேரளாவின் ஏழு சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்றேன்.
கட்சி எனக்கு அளித்த பொறுப்பை நிர்வகித்தேன். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. நசீர் அகமது, அப்துல் ஜப்பார் மீதான நடவடிக்கையும் தேவையற்றது' என்று ஜமீர் கூறியுள்ளார்.
தற்போதைக்கு அமைச்சர் பதவியை காப்பாற்றி கொள்ள, கேரள சட்டசபை தேர்தலை ஜமீர் நம்பியுள்ளார். இவர் பிரசாரம் செய்த தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், கட்சியில் அவரது இமேஜ் உயரும்; பதவியும் தப்பலாம்.
